திருத்தணி, மார்ச். 5: திருத்தணி புதிய பேருந்து நிலையத்தில் தரமற்றமுறையில் கட்டப்பட்ட செங்கல் சுவரை அகற்ற வேண்டும் என சட்டமன்ற உறுதிமொழிக்குழு உத்தரவிட்டுள்ளது. சட்டமன்றத்தில் முதல்வர், அமைச்சர்கள் அறிவிக்கும் உறுதிமொழியை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்தும் வகையில் சட்டமன்ற உறுதிமொழிக்குழு நியமிக்கப்பட்டு, அது சம்பந்தமாக அக்குழு ஆய்வு செய்து வருகிறது. இதில் ஒரு பகுதியாக, திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகளை சட்டமன்ற உறுதிமொழிக்குழு தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ய திருத்தணிக்கு நேற்று வருகை தந்தனர். அவர்களுக்கு கலெக்டர் மு.பிரதாப், திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் வரவேற்பு வழங்கினர்.
திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்த குழுவினருக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டு மலர்மாலை அணிவித்து பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருத்தணி-அரக்கோணம் சாலையில் புதிய பேருந்து நிலையம், அரசு ஆதிதிராவிடர் மகளிர் விடுதி, திருவாலங்காடு சர்க்கரை ஆலை ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தினர். பின்னர் மதிப்பீட்டு குழு தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருத்தணி முருகன் கோயிலுக்கு யானை வாங்க வேண்டும் என்ற பக்தர்கள் கோரிக்கையை ஏற்று ₹27 லட்சம் மதிப்பீட்டில் கோயில் யானை வாங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டோம். இதில், வனவிலங்கு சட்டம் கடுமையாக இருப்பதால், யானை வாங்கி கோயிலில் பராமரிப்பதில் சிக்கல் இருப்பதால் அத்திட்டம் கைவிடப்பட்டு, யானை வாங்க பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ₹27 லட்சம் கோயில் வளர்ச்சி திட்டப் பணிகளுக்கு பயன்பப்டுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருத்தணியில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்தும் வகையில் அரக்கோணம் சாலையில் ₹15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் தரமாக உள்ளது. இருப்பினும் சுற்றுச்சுவர் உள்ளிட்ட இதர பணிகளுக்காக பயன்படுத்தப்படும் செங்கல் வேகாமல், தரமற்ற முறையில் இருப்பதாக கண்டறியப்பட்டது. இதனையடுத்து தரமற்ற செங்கற்களை உடனடியாக அகற்றி தரமான செங்கல் மூலம் கட்டிப்பணிகள் மேற்கொள்ள நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. திருத்தணி அரசு ஆதிதிராவிடர் நல மாணவியர் விடுதியில் ஆய்வு நடத்தினோம். இதில் மாணவிகள் துணிகள் துவைக்க வாஷிங் மிஷின் பழுதாகியுள்ளதால் துணி துவைக்க அவதி அடைந்து வருவதாக தெரிவித்தனர். அவர்களுக்கு புதிய வாஷிங் மிஷினுக்கு ஏற்பாடு செய்ய உத்தரவிட்டோம். தொடர்ந்து திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இவ்வாறு கூறினார்.