திருத்தணி, மே 20: திருத்தணியில், கோடை வெயில் கொளுத்தி வந்த நிலையில், அரைமணி நேரம் கனமழை பெய்தது. திருத்தணி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக கோடை வெயில் கொளுத்தி வாங்கி வந்தது. மேலும், ஏப்ரல் முதல் வாரம் முதல் 100 டிகிரி வெயில் கடந்து அதிகபட்சமாக 109 டிகிரி வெயில் சுட்டெரித்து. இதனால், வெப்ப அலைக்கு, பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர். கோடை வெயிலின் உச்சகட்டமாக அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்கி சுட்டெரித்து வரும் நிலையில், கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது.
இந்நிலையில், நேற்று திருத்தணியில் வானம் இருண்டு மேகமூட்டத்துடன் சுமார் அரை மணி நேரம் கனமழை பெய்தது. இதனால் நகரில், மருத்துவமனை சாலை, ஆறுமுகசுவாமி கோயில் தெரு, காந்தி ரோடு ஆகிய பகுதிகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலைகளில் தேங்கியதால், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர். கோடை மழைக்கு வெப்பம் தணிந்து சில்லென்று காற்று வீசியதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.