திருத்தணி, மே 21: திருத்தணி பகுதியில் நேற்று இடி மின்னலுடன் பெய்த கனமழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. பகல் நேரங்களில் வெப்ப சலனமும், இரவில் புழுக்கமும் ஏற்பட்டு சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைத்து தரப்பு மக்களும் பெரும் பாதிப்படைந்து வந்தனர். தற்ேபாது, கோடை வெயிலின் உச்சகட்ட வெப்பமாக கத்திரி வெயில் தொடங்கிய நாள் முதல் 4 நாட்களாக மிதமான கோடை மழை பெய்து வருகிறது.
அந்த வகையில், நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் திடீரென்று இடி மின்னலுடன் சுமார் 2 மணி நேரம் மழை கொட்டியது. திருத்தணி பகுதியில் நேற்று 56 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இதனால், திருத்தணி நகரில் தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், வாகனங்கள் முகப்பு விளக்கு எரியவிட்டபடி மெதுவாக சென்றன. மேலும், சாலையோர வியாபாரிகள் மற்றும் பயணிகள் அவதி அடைந்தனர். கோடை வெயிலால் அவதிப்பட்ட நிலையில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், வெப்பம் குறைந்து சில்லென்று காற்று வீசுவதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். திருவாலங்காடு, பள்ளிப்பட்டு சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இடி விழுந்ததில் கோயில் கலசம் சேதம்
ஆவடி கோவர்த்தனகிரி நகர் அருகே கலைஞர் நகர் 1வது தெருவில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலைச் சுற்றி சுமார் 100ம் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று ஆவடி பகுதியில் இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. மாலை 7.20 மணியளவில் மேற்கூறிய முத்து மாரியம்மன் கோயில் கலசத்தில் பலத்த சத்தத்துடன் சக்தி வாய்ந்த இடி விழுந்தது. அப்போது நெருப்புப் பொறிகள் பறந்தன. இதனால் கோபுர கலசம் இடிந்து விழுந்தது. பயங்கர சத்தம் கேட்டு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனர். இடி விழுந்ததில் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் டிவி, மிக்ஸி, பேன், பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்ற மின்சாதன பொருட்கள் பழுதாகின.