திருத்தணி செப். 4: திருத்தணி நகர, ஒன்றிய பகுதிகளில் அரசு திட்டங்களை கலெக்டர் திடீர் ஆய்வு நடத்தினார். திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் பகுதியில் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை திடீரென மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு செய்தார். அப்போது, அவர் சாலையின் தரம் குறித்து ஆங்காங்கே அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தினார். அவருடன் ஊரக வளர்ச்சித் துறைமாவட்ட பொறியாளர் ராஜவேல், உதவி இயக்குனர் சுமதி, ஒன்றிய ஆணையர் சந்தானம், ஒன்றிய பொறியாளர் ஞானபிரகாசம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதனை தொடர்ந்து, திருத்தணி நகரத்தில் நடைபெற்று வரும் திருத்தணி அரக்கோணம் சாலையில் புதிய பேருந்து நிலையம் ரூ.12.48 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. இந்தப் பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது, அவருடன் நகராட்சி ஆணையர் அருள், நகர் மன்ற துணைத் தலைவர் சாமிராஜ், கவுன்சிலர்கள் விஜய் சத்யா ரமேஷ், அப்துல்லா, பிரசாத் நாகராஜ், பொறியாளர் விஜயராஜ காமராஜ், பொதுப்பணி மேற்பார்வையாளர் நாகராஜ், ஒப்பந்ததாரர் தாமோதரன்ஆகியோர் உடன் இருந்தனர். அங்கிருந்த அதிகாரிகளிடம், இந்தப் பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, சுமார் ரூ.104 கோடி திட்டத்தில் திருப்பாற்கடல் கூட்டு குடிநீர் திட்டம், திருத்தணி நகரத்தில் நடைபெற்று வருகிறது. அந்தப் பணியையும், சேகர் வர்மா நகர், கன்னிகாபுரம் ஆகிய பகுதிகளில் கட்டப்பட்டுள்ள குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்தனர். அப்போது அவருடன் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பற்குணன், உதவி நிர்வாக பொறியாளர்கள் பிரபாகரன், குமரவேல் ஆகியோர் உடன் இருந்தனர் .
அவர்களிடம் கூறும்போது, விரைந்து பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைந்து முடிக்கும்மாறு கலெக்டர் கேட்டுக்கொண்டார். இதன் பின்னர் திருத்தணி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் 5 அடுக்கு கொண்ட மருத்துவமனை கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பணியினை மாவட்ட கலெக்டர் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது, திருத்தணி வட்டாட்சியர் மதன், வருவாய் ஆய்வாளர் கமல் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.