திருத்தணி, மே 14: திருத்தணியில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வருகையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்காக சுட்டெரிக்கும் வெயிலில் சுமார் 2 மணி நேரம் காத்திருந்த பெண்கள் கடும் அவதி அடைந்தனர். அதிமுக பொதுச் செயலாளர், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய சென்னையிலிருந்து சாலை மார்கத்தில் நேற்று திருப்பதிக்குச் சென்றார். அப்போது சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணியில் அதிமுக அமைப்பு செயலாளர், முன்னாள் எம்.பி திருத்தணி கோ.அரி தலைமையில் தேசிய நெடுஞ்சாலைக்கு இருபுறமும் பேனர்கள், கட் அவுட்டுகள், அலங்கார தோரணங்கள் அமைத்து 500க்கும் மேற்பட்ட பெண்களிடம் மலர்கள் வழங்கி நிற்க வைத்தனர்.
மதியம் 1 மணிக்கு எடப்பாடி வருவதாகக் கூறி, பெண்களை உச்சி வெயிலில் கால்கடுக்க காக்க வைத்தனர். கத்திரி வெயில் கொளுத்தி வரும் நிலையில் சுமார் 2 மணி நேரம் பெண்கள் நிற்க வைக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்தனர். முதியோர் நிற்க முடியாமல் தத்தளித்தனர். மாலை 4 மணிக்கு திருத்தணிக்கு எடப்பாடி வருகை தந்தார். அப்போது அவருக்காக காத்திருந்த அதிமுகவினரால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு திருத்தணி கோ.அரி தலைமையில் கிரேன் உதவியுடன் ராட்சத ரோஜா பூ மாலை அணிவிக்கப்பட்டு வீரவாள் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. சுமார் அரைமணி நேரம் நிர்வாகிகள் வரவேற்பை எடப்பாடி ஏற்றுச் சென்ற பின்னர் போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.