திருத்தணி: திருத்தணி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மரத்தில் இருந்த விஷ வண்டுகள் கடித்ததால் 13 மாணவர்கள் காயமடைந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி அடுத்த தாடூர் ஊராட்சிக்கு உட்பட்ட எல்என் கன்டிகை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில், அந்தப் பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு மாணவ மாணவிகள் சென்றனர். அப்போது கடவுள் வாழ்த்து நேரத்தில் சில மாணவர்களை மரத்தில் இருந்த விஷ வண்டுகள் கடித்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த ஆசிரியர்கள் வண்டு கடியினால் பாதிக்கப்பட்ட தனுஷ்(13), விஷ்வா(11), வெற்றிமாறன்(12), மிதிலேஷ்(10), மனோஜ்(11) உள்ளிட்ட 13 மாணவ மாணவிகள் அனைவரையும் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவலறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர், காவல்துறையினர், வருவாய்த் துறையினர், கல்வித் துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து திருத்தணி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பள்ளி வளாகத்தில் உள்ள மரங்கள் மீது இருந்த விஷ வண்டுக்களை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த சம்பவத்தால் நேற்று அப்பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.