திருத்தணி, ஆக. 23: திருத்தணி அருகே உள்ள காப்பு காட்டில், சந்தனமரம் வெட்டி கடத்திய மூன்று பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து வனத்துறையினர் 10 கிலோ சந்தனமர துண்டுகள் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவான ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். திருத்தணி அருகே எஸ்.வி.ஜி.புரம் காப்பு காட்டில் மான், மயில் உள்ளிட்ட வன விலங்குகள், செம்மரம், சந்தனமரம் உள்பட மருத்துவ குணம் நிறைந்த மரங்கள் உள்ளன. இந்நிலையில், காப்பு காட்டில் சிலர் சந்தனமரத்தை வெட்டி கடத்துவதாக மாவட்ட வன அலுவலர் சுப்பையாவுக்கு ரகசிய தகவல் வந்தது. அதன் அடிப்படையில் திருத்தணி வனச்சரக அலுவலர் விஜயசாரதி, தலைமையில் திருவள்ளூர் வனச்சரக அலுவலர் அருள்நாதன், வனவர் கிருஷ்ணன் மற்றும் வன காப்பாளர் நடராஜன் ஆகியோர் நேற்று எஸ்.வி.ஜி.புரம் காப்பு காட்டில் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது 4 பேர் சந்தனமரத்தை வெட்டி அதனை துண்டுகளாக சாக்கு பையில் வைத்துக் கொண்டு எடுத்துச் செல்ல இருந்தனர். அப்போது வனத்துறையினர் அவர்களை சுற்றிவளைத்தனர். இதில் ஒருவர் மட்டும் தப்பியோடி விட்டார். ேமலும், மூன்று பேரை மடக்கி பிடித்த வனத்துறையினர் அவர்களிடமிருந்து 10 கிலோ எடை கொண்ட சந்தனமர துண்டுகள் மற்றும் மரங்களை வெட்டி கடத்த பயன்பாட்டில் வைத்திருந்த கோடாரி மற்றும் கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர்களை திருத்தணி வனச்சரகர் அலுவலகம் கொண்டு வந்தனர். பின்னர் நடத்திய விசாரணையில், திருத்தணி பாபிரெட்டிப்பள்ளியை சேர்ந்த ராசுகுட்டி(27), தாடூர் அருகே எல்.என்.கண்டிகை சேர்ந்த கணேசன்(40), வி.கே.ஆர்.புரத்தை சேர்ந்த ரவி(48) அவரது மருமகன் ஆந்திர மாநிலம் புத்தூர் சேர்ந்த ஏழுமலை(20) ஆகிய 4 பேர் காப்புகாட்டில் அத்துமீறி சந்தனமரம் வெட்டி சிறு சிறு துண்டுகளாக ஏஜெண்டுகள் மூலம் விற்பனைக்கு வைத்திருந்ததாக தெரிவித்தனர். இதன் சந்தை மதிப்பு சுமார் ₹1 லட்சம் ஆகும். இது குறித்து வழக்கு பதிவு செய்து மூன்று பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடிய ராசுகுட்டி என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.