திருத்தணி, ஜூன் 4: திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 225 பயனாளிகளுக்கு ரூ.1.05 கோடி மதிப்பிலான நலதிட்ட உதவிகளை கலெக்டர் மு.பிரதாப், எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் வழங்கினர். திருத்தணி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மாதம் 20ம் தேதி ஜமாபந்தி முகாம் மாவட்ட கலெக்டர், ஜமாபந்தி அலுவலர் மு.பிரதாப் தலைமையில தொடங்கி நடைபெற்று வந்தது. திருத்தணி வட்டத்திற்கு உட்பட்ட 65 வருவாய் கிராமங்களில் வருவாய் பிர்கா வாரியாக ஜமாபந்தி முகாம் நடைபெற்றது. தினமும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று இலவச வீட்டுமனை பட்டா, கணினி பட்டா, பட்டா மாற்றம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு வருவாய்த் துறை சார்பில் வழங்கப்படும் சான்றுகள் கோரி விண்ணப்பங்கள் வழங்கினர்.
அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் சான்றுகள் உடனுக்குடன் வழங்கப்பட்டது. ஜமாபந்தி முகாம் நிறைவு விழா கலெக்டர் மு.பிரதாப் தலைமையில் நேற்று மாலை நடைபெற்றது. கோட்டாட்சியர் கனிமொழி முன்னிலை வகித்தார். வட்டாட்சியர் மலர்விழி வரவேற்றார். இதில் திருத்தணி எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதில் 226 பயனாளிகளுக்கு ரூ. 1.05 கோடி மதிப்பீட்டில் வீட்டு மனை பட்டா, கணினி பட்டா, உட்பிரிவு, குடும்ப அட்டை, சான்றுகள் உள்பட நலதிட்ட உதவிகளை கலெக்டர் மு.பிரதாப், எஸ்.சந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் இணைந்து பயனாளிகளுக்கு வழங்கினர்.
இதில் கலெக்டர் பிரதாப் பேசுகையில், திருத்தணி ஜமாபந்தி முகாமில் பொதுமக்களிடமிருந்து மொத்தமாக 549 மனுக்கள் பெறப்பட்டு 306 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. மக்களை தேடி அனைத்து திட்டங்களும் சேர வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உன்னத நோக்கத்துடன் செயல்படுவதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று ஜமாபந்தியில் வழங்கிய மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள மனுக்கள் மீது அலுவலர்கள் விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்றார். இந்நிகழ்ச்சியில் துணை கலெக்டர் வெங்கட்ராமன், திருத்தணி மேற்கு ஒன்றியச் செயலாளர் கிருஷ்ணன், அலுவலக மேலாளர் கமல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.