திருத்தணி, ஜூன் 7: தினகரன் செய்தி எதிரொலியாக திருத்தணியில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற உணவுப் பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும், வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஆன்மிக நகரமாக விளங்கும் திருத்தணியில் உள்ள சில உணவு கூடங்கள், சாலையோர கடைகள், துரித உணவுக் கடைகள் ஆகியவற்றில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த மே மாதம் 25ம் தேதி தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இச்செய்தி எதிரொலியாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரதாப் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர்( உணவு பாதுகாப்பு) டாக்டர் கதிரவன் அறிவுறுத்தலின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர் துர்காதேவி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ரவீந்திரநாத், வெங்கடேசன், சேகர், புஷ்பா ஆகியோர் கொண்ட குழுவினர் கடைகளில் திடீர் ஆய்வு நடத்தினர்.
திருத்தணி பேருந்து நிலையம், சன்னதி தெரு, அரக்கோணம் சாலை ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பாஸ்ட்புட், ஓட்டல்கள், ஸ்வீட் கடைகள், பழக்கடைகள், ஜூஸ் கடைகள், டீ கடைகள் என 50க்கும் மேற்பட்ட கடைகளில் ஆய்வு செய்தனர். இதில், இறைச்சியில் ரசாயனம் கலர் மற்றும் உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு இறைச்சி உணவுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. அதேபோல், செயற்கையாக பழுக்க வைத்த பழங்கள், டீ தூளில் கலப்படம கண்டறியப்பட்டு கடை வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆய்வுக்கு பிறகு உணவு பாதுகாபப்பு அலுவலர்கள் கூறுகையில், தரமற்ற உணவு பொருட்கள் விற்பனை தொடர்பாக பொதுமக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும். கலப்பட உணவுகள் குறித்து 9444042322 என்ற செல்போன் எண்ணுக்கு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து, சோதனை நடத்தி கலப்பட உணவுகள் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.