வேலூர், ஆக.24: காட்பாடி காந்தி நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் விசாரித்துக்கொண்டிருந்தபோது, திருட்டு காரை வேகமாக ஓட்டிச் சென்று கட்டிட சுவற்றில் மோதிவிட்டு தப்பிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் விருதம்பட்டு போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு வேலூர்-சித்தூர் சாலை ஓடைப்பிள்ளையார் கோயில் சந்திப்பில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனர். அப்போது சித்தூர் மார்க்கத்தில் இருந்து ஒரு காரை மற்றொரு கார் இழுத்தபடி வந்தது. இக்காரை நிறுத்தி விசாரித்தபோது காரில் 3 பேர் இருந்தனர். விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணமாக பதில் கூறினர். தொடர்ந்து விசாரித்தபோது திடீரென காரை காந்தி நகர் சர்வீஸ் சாலையில் திருப்பி வேகமாக சென்றனர்.
இதனால் சுதாரித்த போலீசார் அவர்களை விரட்டிச்சென்றனர். அப்போது காரின் இணைப்பு கயிறு அறுந்து அங்குள்ள வங்கியின் சுவற்றில் மோதியது. இதில் வங்கி படிக்கட்டு பக்கவாட்டு தடுப்பு கம்பி சேதமானது. மேலும் காரின் முன்பக்கம் நொறுங்கியது. உடனடியாக காரில் இருந்து இறங்கியவர்கள் தள்ளி வந்த காரின் இணைப்புக்கயிறை அறுத்துவிட்டு தாங்கள் வந்த காரில் ஏறி வேலூர் மார்க்கமாக தப்பிச் சென்றனர். மர்ம ஆசாமிள் 3 பேர் வந்த காரில் நம்பர் பிளேட் இல்லாமலும், இழுத்து வரப்பட்ட காரில் ஓசூர் பதிவெண் இருந்ததும் தெரிய வந்தது. இதனால் இரண்டு கார்களும் திருட்டுக்கார்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட நபர்கள் குறித்தும் அவர்கள் ஓட்டி வந்த கார் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தமிழக-ஆந்திர எல்லை தொடங்கி வேலூர் வரை உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு காட்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.