திருச்செந்தூர், மே 24: திருச்செந்தூர் அருகே வாழைத்தோட்டங்கள் தீப்பற்றி எரிந்ததில் சுமார் 6 லட்சம் மதிப்பிலான 5 ஆயிரம் குலை வாழைகள் தீயில் கருகியது. திருச்செந்தூர் அருகே காயாமொழி பஞ்சாயத்துக்குட்பட்ட ஊத்தங்கரைவிளையில் விவசாய நிலங்களில் மின் கசிவு காரணமாக நேற்று பகலில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகத்தால் தீயானது அருகில் உள்ள அடுத்தடுத்த 3 வாழைத்தோட்டங்களில் பரவியது. இது குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை நிலைய அலுவலர் ராஜமூர்த்தி தலைமையிலும், சாத்தான்குளம் நிலைய அலுவலர் ஹாரிஸ் தலைமையிலும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காயாமொழியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது தோட்டத்தில் தீயை அணைத்துக்கொண்டிருந்தனர். அதற்குள் அருகேயிருந்த வாழை மற்றும் தோட்டத்தில் தீ பரவியது. இதில் உடன்குடி சிவன்ராஜ் என்பவரது நான்கரை ஏக்கர் பரப்பளவில் பயிரிட்ட ரூ. 5 லட்சம் மதிப்பிலான 4,500 குலை வாழைகள் மற்றும் பாஸ்கர் தோட்டத்தில் ஒரு லட்சம் மதிப்பிலான சுமார் 500 குலை வாழைகள் தீயில் கருகியது. சுமார் 2 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
திருச்செந்தூர் அருகே வாழைத்தோட்டங்கள் தீயில் எரிந்து நாசம்
0