உடன்குடி, செப். 6: திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகே பழுதடைந்த சாலை, தினகரன் செய்தி எதிரொலியாக சீரமைக்கப்பட்டது. கோயில் நகரமான திருச்செந்தூரில், திருச்செந்தூர் – திருநெல்வேலி சாலையில் அரசு மருத்துவமனை அருகே சாலை பழுதடைந்து ராட்சத பள்ளம் ஏற்பட்டிருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். மேலும் அப்பகுதியில் உள்ள கழிவுநீர், பைப் லைன் உடைப்பு என அந்த பகுதியில் எப்போதும் தண்ணீர் தேங்கி கிடந்தது. இச்சாலையை சீரமைக்க வலியுறுத்தி போராட்டமும் நடந்தது.
இதுகுறித்து தினகரனில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில், சேதமடைந்து காட்சியளித்த சாலை, நேற்று காலை சீரமைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்செந்தூர் -திருநெல்வேலி சாலை அரசு மருத்துவமனை அருகில் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது எனவும், மேலும் அப்பகுதியில் கழிவுநீர் குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். உடனடியாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனை அருகிலுள்ள சாலை சீரமைக்கப்பட்டு கழிவுநீர் குழாயும் சரி செய்யப்பட்டது. எனவே தற்போது அந்த சாலையில் வாகனங்கள் சிரமமின்றி சென்று வருகின்றன. இவ்வாறு கூறியுள்ளார்.