திருச்செங்கோடு, ஜூலை 10: கலெக்டரின் உத்தரவின் பேரில், பஸ்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு விதி மீறிய வாகனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. திருச்செங்கோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன் கூறியதாவது: திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்லும் பஸ்களில், அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி வருவதாக, நாமக்கல் கலெக்டருக்கு வந்த புகார்களின் அடிப்படையில், எனது தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமாபிரியா மற்றும் போலீசாருடன் இணைந்து, திருச்செங்கோட்டில் இருந்து சேலம் செல்லும் வழித்தட பஸ்களில் தணிக்கை செய்யப்பட்டது.
இச்சோதனையின் போது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி வந்தது, அதிக பாரம் ஏற்றி வந்தது, இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் வந்தது, செல்போன் பேசிக்கொண்டு வந்தவர்கள் என 150க்கும் மேற்பட்ட வாகனங்களை சோதனை செய்யப்பட்டன. இதில் 30 வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு, அபராதத் தொகையாக ₹10,500 வசூலிக்கப்பட்டது. இது போன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.