திருச்சுழி, ஆக.9: திருச்சுழி அருகே உள்ள தென்பாலை கிராமத்தில் இருந்து தினமும் பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 100க்கும் மேற்பட்டோர் அரசு பேருந்து மூலம் புலியூரன் செம்பட்டி வழியாக அருப்புக்கோட்டைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தென்பாலை கிராமத்திலிருந்து அரசு பேருந்து புலியூரான் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக பேருந்து மீது அவ்வழியாக வந்த வேன் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலமாக சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது குறித்து திருச்சுழி போலிசார் விசாரித்து வருகின்றனர்.