காரைக்குடி, செப்.12: காரைக்குடி தொழில் வணிகக்கழக செயற்குழுகூட்டம் அதன் தலைவர் சாமிதிராவிடமணி தலைமையில் நடந்தது. செயலாளர் லயன்கண்ணப்பன் வரவேற்றார். துணைத்தலைவர் ராகவன், காசி விஸ்வநாதன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், திருச்சி முதல் ராமநாதபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை 2 வழிச்சாலையாக உள்ளது. பகல், இரவு நேரங்களில் வாகனங்கள் அதிகளவில் இருபுறங்களிலும் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. வாகன விபத்துகள் அதிகரித்து வருகிறது. டூவீலர்களில் செல்வோர் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.
எனவே இந்த இருவழிச்சாலையை இந்திய அரசு நெடுஞ்சாலை ஆணையகம் நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். போக்குவரத்து ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். நாய் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும். ஆடு, மாடுகள் சாலையில் திரிவதை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் சரவணன், இணைச்செயலாளர்கள் கந்தசாமி, துணைத்தலைவர் சத்தியமூர்த்தி, இணைச்செயலாளர் சையது உள்பட பலர் கலந்து கொண்டனர். இணைச்செயலாளர் ராமநாதன் நன்றி கூறினார்.