திருச்சி, ஜூன் 5: திருச்சி மாவட்ட கோர்ட்டுகளில் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெறவுள்ள ‘தேசிய மக்கள் நீதிமன்றத்தில்’ (மெகா லோக் அதாலத்) வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் நிலுவையிலுள்ள தங்கள் நீண்ட கால வழக்குகளில் உரிய தீர்வு பெற மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிருஸ்டோபர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி கிருஸ்டோபர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,
தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம், மணப்பாறை, லால்குடி, துறையூர், முசிறி, ரங்கம் மற்றும் தொட்டியம் ஆகிய கோர்ட்டுகளில் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் வரும் ஜூன் 14ம் தேதி நடைபெறவுள்ளது. அதில், ஏற்கெனவே கோர்ட்டுகளில் நிலுவையிலுள்ள வழக்குகளில், சமரசம் செய்யக்கூடிய காசோலை மோசடி வழக்குகள், தொழிலாளர் நல வழக்குகள், குற்றவியல் வழக்குகள், வங்கிக்கடன், கல்விக்கடன் தொடர்பான வழக்குகள், மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோரும் வழக்குகள், விவாகரத்து தவிர்த்து மற்ற குடும்பப்பிரச்சனைகள் குறித்த வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளில் இருதரப்பினரையும் அழைத்து சமரசாக பேசி வழக்கில் தீர்வு பெறப்படும். மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக்கொள்ளும் வழக்குகளுக்கு மேல்முறையீடு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மக்கள் நீதிமன்றத்தில் முடிக்கப்படும் வழக்குகளுக்காக செலுத்தப்படும் கோர்ட் கட்டணத்தை முழுமையாக திரும்பப்பெறலாம்.
மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் வழக்குகளில் சட்ட ரீதியாகவும், சமரச முறையிலும் தீர்வு காணப்படும். இத்தகைய வழக்குகளில் தீர்வு காணும் பொருட்டு வரும் ஜூன் 9ம் தேதி முதல் ஜூன் 13ம் தேதி வரை பணியிலுள்ள நீதிபதிகள் கொண்ட முன் அமர்வுகள் (Pre Sitting) வழக்குகளை விசாரிக்கும். இந்த அமர்வுகளில் நீதிபதி முன்பாக இருதரப்பினரும் பிரச்னைகளை பேசி சுமூக உடன்பாடு செய்து கொள்ளவும், அதன் அடிப்படையில் தீர்வு காணவும் முடியும். இந்த அமர்வு திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு (ADR Building) அலுவலகத்தில் பிற்பகல் 3.00 மணி முதல் 5.30 மணி வரை 5 நாட்கள் நடைபெறும். இதுகுறித்த மேலும் தகவல்களுக்கு திருச்சி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தொலைபேசி எண் 0431-2460125ஐ தொடர்பு கொள்ளலாம். எனவே, வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் இவ்வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வழக்குகளுக்கு உடனடி தீர்வு பெறலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.