திருச்சி, செப்.1: தமிழ்நாடு அரசு வீடுதோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டந்தோறும் புத்தக திருவிழாக்களை நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்து சிறப்பாக பயன்படுத்தி வரும் தீவிர வாசகர்களை கண்டறிந்து ஊக்குவிக்க சொந்த நூலகங்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
சொந்த நூலகம் அமைத்து சிறப்பாக செயல்படுத்தி வரும் தீவிர வாசகர்கள் செப்.10ம் தேதிக்குள் trichyliboffice@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது மாவட்ட நூலக அலுவலர், 144 மேலரண்சாலை, சிங்காரத்தோப்பு, திருச்சி-8 என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது கடிதம் மூலமோ விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
விருதிற்காக விண்ணப்பிப்பவர்கள், பெயர், முகவரி, தொலைபேசி எண், நூல்களின் எண்ணிக்கை, அரியவகை நூல்களின் எண்ணிக்கை மற்றும் எந்த நாள் முதல் பராமரிக்கப்பட்டு வருகிறது போன்ற விபரங்களை சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது. மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஒரு நூலகம் தேர்வு செய்யப்பட்டு சொந்த நூலகத்திற்கான விருது மற்றும் சான்றிதழ் திருச்சியில் இம்மாதம் 27லிருந்து அக். 6ம் தேதி வரை நடைபெறும் புத்தக திருவிழாவில் வழங்கப்படும் என மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.