திருச்சி. மே 20: திருச்சி மாநகரப்பகுதிகளுக்குள் கட்டப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலங்களின் கீழ் பயன்பாடின்றி காணப்படும் இடங்களை விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குத் தளங்களாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருச்சி மாநகராட்சி பல புதிய மேம்பாட்டுத் திட்டங்களை (உணவுத் தெருக்கள் உள்ளிட்டவை) அமல்படுத்த இடவசதி குறைவாக இருப்பது ஒரு பெரிய சவாலாக இருக்கிறது. ஆனால், சாலை மேம்பாலங்களின் கீழுள்ள வெற்றிடங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு பெரும்பாலும் கவனிக்கப்படாமல், பயனற்றவையாகவே காணப்படுகின்றன. இன்றைய நிலையில் அந்த காலியிடங்கள் அனைத்தும், குப்பைகள் கொட்டும் இடமாகவும், பழைய பொருட்களை சேமித்து வைக்கும் இடமாகவும், இன்னும் ஒருசில இடங்களில் புதர்கள் மண்டிபோய் கிடக்கும் நிலை உள்ளது.
உயர்மட்ட சாலைகளின் கீழ் நடைபாதைகள் போன்ற திட்டங்கள் தோல்வியடைந்த நிலையில், குறிப்பாக இளைஞர்கள், நகராட்சி நிர்வாகத்தை நாடி, விளையாட்டு தளங்கள் மற்றும் பேட்மின்டன் மைதானங்கள் போன்ற செயல்பாடுகளுக்கு இந்த பொது இடங்களை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். திருச்சி நகரத்தில் சுமார் 6 முக்கிய சாலை மேம்பாலங்கள் உள்ளன. இவை தலா 3.3 கிலோமீட்டர் நீளமான பகுதியை உள்ளடக்கியவையாகும். பாலக்கரை, தென்னூர் மற்றும் ஸ்ரீரங்கம் மேம்பாலங்களின் கீழ் நடைபாதைகள், திறந்தவெளி உடற்பயிற்சி கூடங்கள், பொது கழிப்பறைகள் போன்றவை அமைக்கப்பட்டிருந்தாலும், அவை பெரும்பாலும் பயன்படுத்தப்படாமலேயே காணப்படுகின்றன.
அதேநேரத்தில், கிரிக்கெட், கால்பந்து, பிகிள்பால் (Pickleball) மற்றும் உள்ளக பேட்மிண்டன் கோர்டுகள் ஆகியவற்றிற்கான artificial turf-க்களுக்கான தேவை இளைஞர்கள் மற்றும் குடும்பங்களிடம் அதிகரித்துவரும் நிலையில், சென்னை மாநகராட்சி போலவே திருச்சி மாநகராட்சியும் இந்த இடங்களை பயனுள்ளதாக மாற்ற வேண்டுமென பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். “திருவானைக்கோவில் மேம்பாலத்தின் கீழ் மக்கள் குப்பை வீச தொடங்கி விட்டனர். சுருங்கிய குடியிருப்பு பகுதிகளில் திறந்தவெளி இல்லாதபோது, இத்தகைய இடங்களை விளையாட்டு தளங்களாக மாற்றினால் குடும்பங்கள் நேரத்தை அர்த்தமுள்ள வகையில் கழிக்க முடியும்,” என ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் கூறுகின்றனர்.
சென்னை கத்திப்பாரா உயர்மட்ட சாலையின் `அர்பன் ஸ்கொயர்’ திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு, நகரத்துக்குள் ஒரு “விழாக்கோலம் நிறைந்த” இடம் தேவையென பொதுமக்கள் வலியுறுத்துகிறார்கள்.தனியார் விளையாட்டு தளங்கள் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000 முதல் ரூ.1,250 வரைக்கும் வசூலிக்கின்றன. இதை ஒட்டி, மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்களை குறைந்த கட்டணத்தில் பொதுமக்கள் பயன்பட வைக்க நகராட்சி முயற்சி எடுக்கலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர். மேம்பாலங்களின் கீழ் உள்ள இடங்கள் பயன்பாட்டின்றி இருப்பதால், அருகிலுள்ள கடைகள் அந்த இடங்களை தங்கள் பொருட்களை குவிப்பதற்காக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளன. கூடவே, வணிக வளாகங்களுக்கு சொந்தமான வாகன நிறுத்துமிடங்கள் இல்லாததால், அந்த இடங்கள் நிரந்தரமாக வாகனங்கள் நிறுத்தப்படுவதற்குப் பயன்படுத்தப்படுகின்றன.
“திருச்சி சந்தை மேம்பாலத்தின் பஸ்ஸ்டாண்ட் பக்கம் கார்கள் மற்றும் ஆட்டோக்கள் இடத்தை முழுமையாக முடக்கியிருப்பதால் யூ-டர்ன் எடுப்பதே சிரமமாக உள்ளது. இந்த இடங்களை பயனுள்ளவையாக மாற்றினால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கிராப்பட்டி, திருவானைக்கோவில் மற்றும் தென்னூர் பகுதிகளில் மேம்பாலங்களின் கீழுள்ள பரந்த இடங்களை உணவுத்தெருக்கள் மற்றும் பேட்மிண்டன் கோர்டுகளாக மாற்ற வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது. கிராப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கபடி விளையாட்டில் ஆர்வமுள்ளதால், அங்கு கபடி திடல்களும் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.