திருச்சி, ஜூன் 7: உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, திருச்சி அஞ்சல் துறை சார்பில், அஞ்சல் ஊழியர்களுக்கு பாம்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு தொழில் வணிகத்துறை மற்றும் செங்கல்பட்டு இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கம் இணைந்து நடத்திய ‘பாம்புகள் குறித்த புதிர்களை அவிழ்த்தல்’ என்ற பயிலரங்கம் திருச்சி தலைமை அஞ்சலகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த திருச்சி மத்திய மண்டல அஞ்சல் துறைத்தலைவர் நிர்மலா தேவி பேசுகையில், ‘பாம்புகள் உழவர்களின் நண்பர்கள், எனவே பாம்புகள் குறித்த தவறான நம்பிக்கைகளை மறந்து, உண்மைகளை அறிவது அவசியம் என்றார்.
இருளர் பாம்பு பிடிப்போர் தொழிற் கூட்டுறவு சங்கத்தின் அலுவலர்கள் செல்வகுமார் மற்றும் முனுசாமி ஆகியோர் பயிலரங்கை நடத்தினர். இப்பயிலரங்கம் வாயிலாக பாம்புகளின் வகைகள், சுற்றுச் சூழலில் அவற்றின் பங்கு, மனிதர்கள் மீது அவற்றின் தாக்கம், பாம்புகள் குறித்த தவறான நம்பிக்கைகள், பாதுகாப்பான முறையில் பாம்புகளை கையாளுதல், பாம்புகளின் வகைகள், சுற்றுச்சூழலில் அவற்றின் சேவைகள், விஷம் மற்றும் விஷமற்ற பாம்புகளை அடையாளம் காண்தல், எதிர்கொள்ளும் அபாயங்கள், பாம்பு கடித்தால் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை மற்றும் முதலுதவிகள் குறித்து விரிவாக விளக்கினர்.
இப்பயிலரங்கில் திருச்சி மண்டல அலுவலகம், திருச்சி கோட்டம் மற்றும் திருச்சி ரயில்வே அஞ்சல் கோட்டத்தை சேர்ந்த உதவி இயக்குனர்கள், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர்கள், உதவி அஞ்சல் கண்காணிப்பாளர்கள், தபால் அதிகாரிகள், எழுத்தர்கள், தபால்காரர்கள், பன்முகத் திறன் பணியாளர்கள் என 150 அஞ்சல் ஊழியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மேலும், பாம்புகள் குறித்த அவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு இப்பயிலரங்கம் விடையளித்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி முதுநிலை கோட்ட கண்கணிப்பாளர் பிரகாஷ் மற்றும் திருச்சி மண்டல அலுவலக உதவி இயக்குனர் பசுபதி ஆகியோர் செய்திருந்தனர்.