உளுந்தூர்பேட்டை, ஆக. 19: உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் 3 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உள்ளது. இந்த சாலையில் கடந்த சில நாட்களாக உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தார்சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை மற்றும் தொடர் விடுமுறை முடிந்து திருச்சியில் இருந்து சென்னை நோக்கி கார் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் செல்லும் நிலையில் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் சாலை போடும் பணி நடைபெற்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் திருச்சியில் இருந்து சென்னை நோக்கி செல்லும் கார் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் ஆபத்தை உணராமல் மறு வழிச்சாலையில் எதிர் திசையில் செல்வதால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையில் உளுந்தூர்பேட்டையை கடப்பதற்கு கடும் சிரமப்பட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.