முசிறி, மே 26: திருச்சி மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் திடீரென ெபய்த கோடை மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திருச்சியில் கடந்த சில தினங்களாக அக்னி வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இரவிலும் வீடுகளில் வெப்பம் காரணமாக பொதுமக்கள் தூக்கத்தை தொலைத்தனர். இந்நிலையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலை 5 மணியளவில் இடிமுழக்கத்துடன் மாநகர பகுதிகளான எடமலைப்பட்டிபுதூர், மன்னார்புரம், சுப்பிரமணியபுரம் ஆகிய பகுதிகளில் லேசாக மழை பெய்தது. அப்போது வெயிலும் அடித்தது. பின்னர் இரவு 7 மணியளவில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சாலையில் நடந்து சென்றவர்கள் குடைபிடித்துச் சென்றனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி தொட்டியம் காட்டுப்புத்தூர், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பகல் நேரங்களில் கடும் வெயில் அடித்தது. இதனால் பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். மாலை சுமார் ஆறு மணி அளவில் கருமேகங்கள் வானில் திரண்டது. குளிர்ந்த காற்று வீசியது. சற்று நேரத்தில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் தண்ணீர் ஓடியது. மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல், மண்ணச்சநல்லூர் பகுதியில் நேற்று 104 டிகிரி வரை வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் வர முடியாமல் தவித்தனர். இந்நிலையில் மாலை 5.30 மணியளவில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. பின்னர் 6.15 மணியளவில் திடீரென இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழையானது மண்ணச்சநல்லூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 3 மணிநேரம் வரை நீடித்தது. இந்த திடீர் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சிஅடைந்தனர்.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, பாலக்குறிச்சி, மணப்பாறை ஆகிய பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்க்கு ஆளாகினர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு அதிகமாக இருந்ததால் மக்கள் வெளியில் நடமாட முடியாத சூழ்நிலையில் நேற்று பெய்த மழையால்வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து இதமான குளிர்ந்த சூழ்நிலை உருவானது. மேலும் இந்த மழையால் விவசாயிகள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.