திருவெறும்பூர், ஜூலை 18: திருச்சி என்ஐடி கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் குறித்த 5 நாள் பயிலரங்கு நேற்று துவங்கியது. திருச்சி திருவெறும்பூர் அருகே தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்ஐடி) உள்ளது. இக்கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் குறித்த 5 நாள் பயிலரங்கு நேற்று துவங்கியது. ஜூலை 17ம்தேதி முதல் 21ம் தேதி வரை ஐந்து நாட்கள் பயிலரங்கு நடைபெறுகிறது. துவக்க விழாவில் என்ஐடி இயக்குனர் அகிலா தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பர்டு பல்கலைக்கழக பேராசிரியர் ராஜு சுந்தர்ராஜன் மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலா ராகவன் ஆகியோர் கலந்து கொண்டு பயிலரங்கை துவக்கி வைத்தனர். திருச்சி என்ஐடி கல்லூரி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இணைந்து பயிலரங்கில் மருத்துவ அணிகலன் கருவிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு திறன் குறித்தும் எதிர்கால பயன்பாடுகள், தரவு சேமிப்பு, பிரச்னைகளுக்கான தீர்வுகள், புதிய நுணுக்கங்கள் ஆகியவை விவாதிக்கப்பட உள்ளன.
மேலும் மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்குவிக்கும் விதமாக அதனை செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக புற்றுநோயாளிகளின் வாழ்நாட்களை நீட்டிக்கும் விதமாக நோயாளிகளின் தரவு, மருத்துவம் குறித்து மற்றும் ஆலோசனைகளை மருத்துவ அணிகலன் கருவிகள் கொண்டு செயல்படுத்துவதற்கான அடுத்த கட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இப்பயிலரங்கில் பேராசிரியர்கள் சிவகுமரன், மூர்த்தி, பிருந்தா உள்ளிட்ட பேராசிரியர்களும் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.