திருச்சி, ஆக.21: திருச்சி மேலகல்கண்டார் கோட்டை விவேகானந்தர் நகர், நேரு தெருவில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை திருச்சி கிழக்கு உணவு பொருள் வழங்கல் தனி தாசில்தார் சத்தியபாமா மற்றும் திருச்சி கிழக்கு வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர் ஆகியோருடன் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை காவல் இனஸ்பெக்டர் ஆகியோர் இணைந்து சென்று அங்கு பார்த்தபோது, சுமார் 40 கிலோ எடை கொண்ட 85 மூட்டைகளில் 3400 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கைப்பற்றி விசாரித்த போது, மேலகல்கண்டார் கோட்டையை சேர்ந்த ஹக்கீம் மகன் அன்வர் பாட்ஷா என்பவர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவாக உள்ள அன்வர் பாட்சாவை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.