சமயபுரம், ஜூலை 18: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வெவ்வேறு பகுதியில் நடந்த சாலை விபத்தில் வாலிபர், கல்லூரி மாணவர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்சி மாவட்டம், வாத்தலை கிளியநல்லூர் அருகே உள்ள வயல் திருப்பஞ்சலி குடித்தெருவை சேர்ந்த பன்னீர்செல்வம். இவரது மகன் ராகுல் (24). இவர் நேற்று தனது பல்சர் பைக்கில் திருச்சியில் இருந்து வயல் திருப்பஞ்சலி யில் உள்ள தனது வீடு நோக்கி வந்துகொண்டிருந்தார். அப்போது மண்ணச்சநல்லூர் நொச்சியம் அடுத்து உள்ள மான்பிடிமங்கலம் பகுதியில் திருச்சி- சேலம் நெடுஞ்சாலையில் நாமக்கல் நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ராகுலின் இருசக்கர வாகனம் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் தலை மற்றும் முகத்தில் படுகாயமடைந்த ராகுல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த மண்ணச்சநல்லூார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து மண்ணச்சநல்லூர் காவல் உதவி ஆய்வாளர் முத்துசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி மாணவர் பலி: சமயபுரம் ஒத்தக்கடை பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகன் திவாகர் (18) . இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிபிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று தனது மோட்டார் பைக்கில் திருச்சி -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த அரசு பேருந்து எதிர்பாராத விதமாக மோட்டார் பைக் மீது மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த திவாகர் படுகாயத்துடன் அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்ததும் சிறுகனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி ரங்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.