திருக்கோவிலூர், ஜூன் 19: திருக்கோவிலூர் அருகே தேனீக்கள் கொட்டியதில் பாதிக்கப்பட்ட 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த பூமாரி கிராமத்தில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிய 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு மரத்தில் கூடு கட்டியிருந்த தேனீக்கள் திடீரென அவ்வழியாக வந்தவர்களை கொட்ட தொடங்கியது. இதனால் அலறி அடித்துக்கொண்டு அங்கிருந்து ஓடினர். சிலர் ஏரியில் உள்ள பாறை இடுக்குகளில் சென்று ஒளிந்து கொண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பா கிருஷ்ணமூர்த்தி சென்று பாதிக்கப்பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதில் ஊராட்சி செயலர் அரசன், மக்கள் நல பணியாளர் கோதாவரி, பொறுப்பாளர் லதா மற்றும் 100 நாள் வேலைக்கு சென்ற செந்தாமரை, பாஞ்சாலை, கண்ணன், அனிதா, சசிகலா, மீனா, கீதா ஆகிய 10 பேர் மட்டும் சிகிச்சைக்காக உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். சிலர் லேசான காயங்களுடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.