திருக்கோவிலூர், ஜூலை 5: திருக்கோவிலூர் அருகே ஏரிக்கரையில் தலையில் வெட்டுக் காயங்களுடன் ஊராட்சி செயலர் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது தொடர்பாக நண்பரை சந்தேகத்தின்பேரில் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சாங்கியம் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாக்கண்ணு மகன் அய்யனார் (48). இவருக்கு கடந்த 20 வருடத்திற்கு முன்பு சத்யா (44) என்ற பெண்ணுடன் திருமணமாகி 2 மகன்கள் உள்ளனர்.
இவர் அதே பகுதியில் கடந்த 25 வருடமாக ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பரான அப்பகுதியில் கோழிப்பண்ணை வைத்துள்ள ஐயப்பன் (43) என்பவர் நள்ளிரவு 2 மணியளவில் அய்யனாரை அவரது வீட்டிற்கு வந்து அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே மணலூர்பேட்டை அடுத்த ஜி.பி.தாங்கல் ஏரிக்கரை பகுதியில் தலையில் வெட்டுக் காயங்களுடன் அடையாளம் தெரியாத நபர் இறந்து கிடப்பதாக அவ்வழியாக சென்றவர்கள் மணலூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் திருமால் ஆகியோர் உயிரிழந்து கிடந்தவரின் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில், தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தவர் சாங்கியம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற செயலர் அய்யனார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அய்யனாரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் தொடர்ந்து நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் அய்யனாரை அவரது வீட்டிற்கு வந்து ஐயப்பன் அழைத்துச் சென்றது தெரியவரவே, அவரது வீட்டில் இருந்த அவரை உடனே சந்தேகத்தின்பேரில் சுற்றிவளைத்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தனது நண்பர் அய்யனாரை குடிபோதையில் வந்து ஐயப்பன் அழைத்துச் சென்றது தெரியவந்த நிலையில், தொடர்ந்து அவரிடம் துருவி துருவி விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே ஊராட்சி செயலர் மர்மசாவு தொடர்பாக அவரது மனைவி சத்யாவிடம் புகாரை பெற்ற போலீசார் சந்தேக மரணம் பிரிவில் வழக்குபதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ஊராட்சி செயலர் அய்யனார் தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததால் அவரை யாரேனும் அடித்துக் கொலை செய்து வீசிவிட்டு சென்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.