நன்றி குங்குமம் ஆன்மிகம் குறளின் குரல் திருப்பூர் கிருஷ்ணன்ஒரு மனிதன் ஆண்மையுடன் இருப்பதில் பெருமையில்லை. அவன் அதையும் தாண்டிப் பேராண்மையுடன் இருக்க வேண்டும். வஞ்சகம் நிறைந்த உலகில் பேராண்மையுடன் இருப்பது எளிதல்ல. பேராண்மை என்பது என்ன? வள்ளுவம் அதை மிக அழகாக விளக்குகிறது.பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்குஅறன் அன்றோ ஆன்ற ஒழுக்கு. (குறள் எண் 148)அடுத்தவர் மனைவியை இச்சித்தல் என்பது இழிசெயல். புலன் வேட்கை, தன் மனை என்னும் எல்லை தாண்டிச் செல்லல் தகாது. பிறன் மனைவியை விரும்பி நோக்காத ஆண்மையே பேராண்மை. அது சான்றோர்க்கு அறம் மட்டுமல்ல, நிறைவான ஒழுக்கமும் ஆகும் என்று அறைகூவுகிறார் வள்ளுவர். மனையறத்தில் மட்டுமல்ல, சமூக அறத்திலும் பேராண்மையுடன் திகழ வேண்டும். பேராண்மை என்ப தறுகண் ஒன்றுற்றக்கால்ஊராண்மை மற்றதன் எக்கு. (குறள் எண் 773)பகைவரை எதிர்த்து நிற்பது ஆண்மை என்றால், அந்தப் பகைவருக்கு ஒரு துன்பம் வந்தபோது அவருக்கும் உதவி புரிதல் பேராண்மையாகும். பகைவரை எதிர்ப்பதென்பது எல்லோரும் செய்யக் கூடியது. ஆனால், பகைவருக்கு உதவி புரியும் அளவு பெருந்தன்மையான மனம் படைத்திருத்தல் என்பது எல்லோராலும் ஆகக் கூடியதல்ல. பேராண்மை உடையவர்களே அத்தகைய மனம் கொண்டிருப்பார்கள். கடும் கொரோனா காலத்தில் இந்தியா, நட்பு நாடு. பகைநாடு என்று பாராமல் அண்டை நாடுகள் உள்ளிட்ட எல்லா நாடுகளுக்கும் மருந்து கொடுத்து உதவிய செயல் பேராண்மை நிறைந்த செயலாகும்.சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடுபேராண்மை வேண்டு பவர். (குறள் எண் 962)புகழோடு தம் குடும்பப் பெருமையை நிலைநாட்ட விரும்புவோர், அந்தப் பெருமைக்கு ஒவ்வாத செயல்களை ஒருபோதும் செய்ய மாட்டார். அவ்விதம் செய்யாதிருப்பதே பேராண்மையாகும் என்கிறது வள்ளுவம். திருக்குறள் போற்றிய பேராண்மையை நம் இதிகாசங்களிலும் புராணங்களிலும் கூட நாம் பார்க்கிறோம். அவை பேராண்மை படைத்த வீரர்களைப் பற்றிச் சித்தரிக்கின்றன. ராவணன் மாபெரும் வீரன்தான். தேவாதி தேவர்களையெல்லாம் போரில் வென்றவன். ஆனால், ராமபிரானுடன் நிகழ்த்திய போரில் தோற்றுவிட்டான். ஆயுதமில்லாது நின்ற அவனைக் கொல்ல, ராமன் மனம் ஒப்பவில்லை. கனிவோடு அவனைப் பார்த்து `இன்று போய் நாளை வா’ எனச் சொல்லி அனுப்புகிறான் ராமபிரான்.ஆள்ஐயா உனக்கு அமைந்தன மாருதம் அறைந்தபூளை ஆயின கண்டனை இன்று போய்ப் போர்க்குநாளை வா என நல்கினன் நாகுஇளம் கமுகின்வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல் – என்பது கம்பன் பாடல். தன் மனைவியைக் கவர்ந்து சென்று சிறை வைத்திருப்பவனிடம் இன்று போய் போர்க்கு நாளை வா என்று சொல்ல எத்தகைய மாபெரும் பண்புசார்ந்த மனஉரம் இருக்க வேண்டும்? அதுதானே பேராண்மை?துரோகம் செய்தவனுக்கும் கையில் ஆயுதம் இல்லாததால், ஒருநாள் அவகாசம் கொடுக்கும் அந்தப் பேராண்மை ராவணனை வெட்கித் தலைகுனிய வைக்கிறது.வாரணம் பொருத மார்பும்வரையினை எடுத்த தோளும்நாரத முனிவர்க் கேற்பநயம்பட உரைத்த நாவும்தாரணி மெளலி பத்தும்சங்கரன் கொடுத்த வாளும்வீரமும் களத்தே போட்டுவெறுங்கையோடு இலங்கை புக்கான்என எழுதுகிறார் கவிச்சக்கரவர்த்தி கம்பர். ராவணனை வதம் செய்யும் முன்பே அவனை முழுமையாக வென்றுவிட்டான் ராமன். ராமனின் பண்பு நலன் ராவணனைக் கூனிக் குறுகச் செய்கிறது. அவன் தலையைக் குனியச் செய்கிறது. பின்னர் தொடர்ந்த போரின் இறுதியில் ராவணன் அழிந்துபடுகிறான். கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் ஜானகியை மனச்சிறையில் கரந்த காதல் வதைக்கப்படுகிறது. மண்டோதரிக்குக் கடும் துயரத்தோடு பெரும் ஆச்சரியமும்கூட. எப்பேர்ப்பட்ட மாவீரன் அவள் கணவன்! அவனை ஒருவன் வெல்வதா? எப்படி சாத்தியமாயிற்று இது? தன் கணவனை வென்ற வெற்றிவீரனைப் பார்க்க விரும்புகிறாள் அவள். தன் கணவனையே கொல்லுமளவு அவனிடம் இருந்த அத்தகைய அபாரமான பலம் என்ன என்று தெரிந்துகொள்ள விரும்புகிறாள்.ராவணனை வதம் செய்த ராமன் தனியே ஒரு பாறையில் துயரத்தோடு அமர்ந்திருக்கிறான். ஒரு மாவீரனைக் கொல்ல நேர்ந்துவிட்டதே என அவன் மனத்தில் சோகம் இழையோடுகிறது. வேறு வழியில்லாமல்தானே கொன்றான்?ராமன் இருந்த இடத்திற்கு அவனைப் பார்ப்பதற்காகப் பின்புறமிருந்து வருகிறாள் மகாராணி மண்டோதரி. மாலை வெயில் அடித்துக் கொண்டிருக்கிறது. மண்டோதரியின் நிழல் ராமன் நிழல் மீது விழுகிறது. மண்டோதரியின் நிழலைப் பார்த்ததுமே பின்னால் வருபவள் ஒரு பெண் என்பதை உணர்கிறான் ராமன். ஒரு பெண்ணின் நிழல் தன் நிழல் மீது விழலாகாது எனத் தள்ளி அமர்கிறான் அவன்.அந்தப் பண்பாடு மண்டோதரியைத் துணுக்குறச் செய்கிறது. பிரமிக்கிறாள் அவள். அடுத்தவர் மனைவியின் நிழல்கூடத் தன் நிழல் மீது படக்கூடாது என எண்ணும் பிறன்மனை நோக்காத ராமனின் அந்தப் பேராண்மைதான் தன் கணவனைக் கொல்லும் சக்தியை ராமனுக்குக் கொடுத்தது என்பதைப் புரிந்துகொள்கிறாள். உண்மை புரிந்துவிட்டதால், ராமனைச் சந்திக் காமலே விலகிச் செல்கிறாள் மண்டோதரி என்கிறது ஓர் அபூர்வ ராமாயணக் கதை.பக்திச் சுவை நனிசொட்டச் சொட்டப் பாடிய சேக்கிழாரின் பெரிய புராணம் பேராண்மை நிறைந்த அடியவர்களைச் சித்திரித்துக் காட்டுகிறது.மாபெரும் சிவ பக்தரான மெய்ப்பொருள் நாயனார் நாடாண்ட அரசரும்கூட. அவரை வீரத்தால் வெல்ல முடியவில்லை. எந்தப் படையெடுப்பாலும் அவரைத் தோற்கடிக்க முடியவில்லை. யோசித்தான் அவர் எதிரியான முத்தநாதன். சூழ்ச்சியால் அவரை வெல்ல முடிவு செய்தான்.சிவனடியார்களை அவர் பெரிதும் மதிப்பவர் என்பதை அவன் அறிவான். எனவே சிவனடியார் வேடம் பூண்டு அவரைத் தனிமையில் சந்தித்தான்.மெய்யெலாம் நீறு பூசிவேணிகள் முடித்துக் கட்டிகையினில் படை கரந்தபுத்தகக் கவளி ஏந்திமைபொதி விளக்கே அன்னமனத்திடைக் கறுப்பு வைத்துபொய்த்தவ வேடம் கொண்டுபுகுந்தனன் முத்த நாதன்என அவன் போலியாய்த் தவவேடம் புனைந்து சென்றதை விவரிக்கிறார் சேக்கிழார் பெருமான். தன்னைக் குனிந்து வணங்கிய மெய்ப்பொருள் நாயனாரை மறைத்து வைத்திருந்த குறுவாளால் குத்திக் கொன்று தன் எண்ணத்தை முடித்துக் கொண்டான் முத்தநாதன். மெய்ப்பொருள் நாயனாரின் மெய்க்காப்பாளனான தத்தன் என்பான் தன் மன்னனைக் கொன்ற முத்தநாதனைக் கடும் சீற்றத்தோடு வாளால் வெட்டப்போகிறான். சாகும் தறுவாயிலிருந்த மெய்ப்பொருள் நாயனாரோ தத்தா நிறுத்து எனக் கூறி அவனைத் தடுக்கிறார்.முத்தநாதனைப் பாதுகாப்பாக நாட்டின் எல்லை வரை கொண்டு விட்டு வருமாறு அறிவுறுத்துகிறார். தன்னை நேசிக்கும் பொதுமக்களிடமிருந்து அவனுக்கு எந்த ஆபத்தும் வராமல் பார்த்துக் கொள்ளும்படிக் கட்டளையிடுகிறார்.தத்தன் கண்களில் கண்ணீர் வழிய அந்த ஆணைக்குக் கட்டுப்படுவதையும் மன்னர் சொன்னபடியே அவன் நடந்துகொள்வதையும் முத்தநாதன் எந்த ஆபத்தும் இல்லாமல் தன் நாடு திரும்புவதையும் மெய்ப்பொருள் நாயனார் சரிதம் விரிவாகவும் உருக்கமாகவும் பேசுகிறது. தன் உயிரை எடுத்தவனின் உயிரைக் காத்த மெய்ப்பொருள் நாயனாரின் ஆண்மையல்லவா பேராண்மை?வீரத்திலெல்லாம் பெரிய வீரம் என்பது தன்னைக் கொன்றவனின் உயிரே எனினும் அதையும் பாதுகாப்பதல்லவா? பேராண்மையின் உச்சத்தை மெய்ப்பொருள் நாயனாரின் நடவடிக்கையில் நாம் தரிசிக்கிறோம். சேக்கிழாரின் சுந்தரத் தமிழ் சொல்லோவியமாக ஒரு பேராண்மையாளனைத் தீட்டிக் காட்டுகிறது. பெரிய புராணத்திலேயே பேராண்மையுடன் வாழ்ந்த இன்னோர் அடியவரின் வரலாறும் இடம்பெற்றுள்ளது. திருநீலகண்ட நாயனார் என்ற சிவனடியாரின் வாழ்வில் ஒரு வியத்தகு சம்பவம் வருகிறது.இன்னொரு பெண்மேல் அவர் இச்சை கொண்டதை அறிந்தாள் அவர் மனைவி. கடும் சீற்றம் கொண்டாள். அவள் சீற்றத்தைத் தணிக்க முற்பட்டார் திருநீலகண்டர்.மூண்ட அப்புலவி தீர்க்கஅன்பனார் முன்பு சென்றுபூண்டயங்கு இளமென் சாயல்பொன்கொடி அனையார் தம்மைவேண்டுவ இரந்து கூறிமெய்யுற அணையும் போதில்தீண்டுவீர் ஆயின் எம்மைத்திருநீல கண்டம் என்றார்.மனைவியை சமாதானப்படுத்தி அவள் ஊடலைத் தணிக்க எண்ணி அவளைத் தொடவந்தார் திருநீலகண்டர். `எம்மைத் தீண்டுவீர் ஆயின் திருநீலகண்டம்’ எனக் கூறி எம்மைத் தீண்டற்க என ஆணையிட்டு விலகி நின்றாள் அவர் மனைவி.என்னை என்று சொல்லாமல் எம்மை என்று பன்மையில் அல்லவா அவள் ஆணையிட்டாள்? எனவே இனி தன் மனைவியை மட்டுமல்ல, எந்தப் பெண்ணையும் தீண்ட மாட்டேன் என உறுதி பூண்டார் திருநீலகண்டர்.ஆதியார் நீல கண்டத்துஅளவுதாம் கொண்ட ஆர்வம்பேதியா ஆணை கேட்டபெரியவர் பெயர்ந்து நீங்கிஏதிலார் போல நோக்கிஎம்மை என்றதனால் மற்றைமாதரார் தமையும் என்தன்மனத்தினும் தீண்டேன் என்றார். கடுமையான இல்லறத் துறவை அனுசரித்தார்கள் அவ்விருவரும். பல்லாண்டுகள் இப்படியே அவர்கள் இருவரும் வாழ, முதியவர்களாகிறார்கள் அவர்கள். சிவபெருமான் அவர்களின் மேனி தீண்டாத அற்புத இல்வாழ்வை உலகிற்கு அறிவித்து அவர்களுக்கு மீண்டும் இளமை அருளிய புனித வரலாற்றை விவரிக்கிறது சேக்கிழாரின் பெரிய புராணம். பிறன்மனை நோக்காத பேராண்மை மட்டுமல்ல, தன் மனையையும் நோக்காத மாபெரும் பேராண்மை அல்லவா திருநீலகண்டருடையது?இந்தச் செய்தியை ஒரு திரைப்பாடலும் எடுத்தாள்கிறது. கவியரசர் கண்ணதாசன் எழுதி, `சவாலே சமாளி’ திரைப்படத்தில் டி.எம்.எஸ் குரலில் ஒலிக்கும் பாடல் அது.நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே,நிழலைப் பார்த்து பூமி சொன்னது என்னைத் தொடாதே
எனத் தொடங்கும் பாடலில் பின்வரும் வரிகள் பெரியபுராணச் செய்தியைத் தொட்டு எழுதப்பட்ட வரிகள்:புதியதல்லவே தீண்டாமை என்பது புதுமை அல்லவே அதை நீயும் சொன்னதுசொன்ன வார்த்தையும் இரவல் தானதுதிருநீலகண்டனின் மனைவி சொன்னது!பழைய இலக்கியம் முழுவதையும் கரைத்துக் குடித்தவர் அல்லவா கவியரசர்? அவர் பொன்னேபோல் போற்றி எடுத்தாண்ட எத்தனையோ இலக்கியச் செய்திகளில் இந்தச் செய்தியும் ஒன்று. இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல் என்கிறது குறள் வகுக்கும் உயரிய தத்துவம்.நமக்குக் கெடுதல் செய்தவர்களே ஆயினும் அவர்களுக்கு நாம் கெடுதல் செய்யாமல், அவர்களே வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. பகைவரை மன்னிப்பது மட்டுமல்ல, அந்தப் பகைமையை முழுமையாக மறந்துவிட்டு, அவர்களுக்கும் நன்மை செய்வது என்பது பேராண்மையின் வெளிப்பாடுதானே?ஆண்மையுடன் இருப்பது அரிதல்ல. பேராண்மையுடன் இருப்பதே அரிதினும் அரிது. சமூகத்தில் பேராண்மையாளர்களை உருவாக்கும் பணியில் திருக்குறளின் பங்கு பெரிதினும் பெரிது.(குறள் உரைக்கும்)…