திருக்காட்டுப்பள்ளி, ஜூலை 1: திருக்காட்டுப்பள்ளியில் வாகன தணிக்கையில் மதுபாட்டில் கடத்திவந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனங்களில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் கடத்தி வந்த 4 பேரில் 3 பேரை கைது செய்து, 320 மது பாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். திருக்காட்டுப்பள்ளி – பூதலூர் சாலையில் காவல் சார்பு ஆய்வாளர் ஜா மற்றும் போலீஸார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது நாணல் பிள்ளைவாய்க்கால் கரையில் 2 பைக்கில் வந்த 4 பேரை மடக்கிப்பிடித்தனர். 4 பேரில் ஒருவன் மட்டும் தப்பிவிட்டான். போலீசார் சோதனையில் அனுமதியின்றி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்தனர். விசாரணையில் நடுக்காவேரி மேல தெருவைச் சேர்ந்தவர்கள் பிரேம் (32), வெற்றிவேல் (41), ராகவன் (20) ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான இவர்களது கூட்டாளியான வேல்முருகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.