திருக்கழுக்குன்றம், ஆக. 25: செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் வேளாண்மை உற்பத்தி ஆணையரும், அரசு முதன்மை செயலாளருமான சமயமூர்த்தி நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். முதலில் திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகம் சென்று இ-சேவை மையத்தின் பணிகள் எவ்வாறு நடைபெறுகிறது என்றும், அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு பட்டா வழங்கப்படுகின்ற பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். பின்னர், திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு சென்று தினமும் எத்தனை பேர் சிகிச்சைக்காக வருகின்றனர். அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, பொதுமக்கள் அவரிடம் இரவிலும், பகலிலும் மருத்துவமனைக்கு எப்போது வந்தாலும் மருத்துவர்கள் இருப்பதில்லை. உரிய மருந்துகள் கிடைப்பதில்லை எனவும், மருத்துவமனை கட்டிடங்களும் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை நோயாளிகள் முன் வைத்தனர். பின்னர், மாவட்ட காண்காணிப்பாளர் சமயமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகயைில், ‘மாதந்தோறும் இதுபோன்று பல்வேறு அலுவலகங்களுக்கு நான் நேரில் சென்று புலத்தணிக்கை மேற்கொண்டு ஒவ்வொரு துறை சார்ந்த திட்டங்களும் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்துகிறேன். திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் தினமும் எத்தனை நோயாளிகள் வருகிறார்கள். உள்நோயாளிகள் எத்தனை பேர், புற நோயாளிகள் எத்தனை பேர் என்றும், பாம்பு கடி மருந்துகள் உள்ளனவா என்றும் ஆய்வு மேற்கொண்டேன்.
இரவிலும், பகலிலும் மருத்துவர்கள் பணியில் இருக்கிறார்களா என்று வருங்காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்படும். முறையாக மருந்து, மாத்திரைகள் வழங்கப்படும். மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில், அதற்கான பணிகள் தொடரும்’ என்றார். அதனை தொடர்ந்து, கொத்திமங்கலம் ஊராட்சியில் உள்ள இருளர் பகுதி மற்றும் அரசு ஆரம்பப் பள்ளியில் கட்டி முடிக்கப்படும் தருவாயில் உள்ள உணவு கூடம் மற்றும் மேலப்பட்டு கிராமத்தில் உள்ள இயற்கை வேளாண்மை பண்ணை ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, பேரூராட்சிகள் துணை இயக்குனர் லதா, திருக்கழுக்குன்றம் தாசில்தார் ராஜேஷ்வரி, துணை தாசில்தார்கள் சையது அலி, ஜீவிதா, ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் கவிதா, திட்ட இயக்குனர் இந்து பாலா, உதவி செயற்பொறியாளர் விக்டர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகலைச்செல்வன், அரிகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.