ராமநாதபுரம்: பல நூற்றாண்டுகளாக வற்றாமல் இருக்கும் திருஉத்தரகோசமங்கை சிவன் கோயில் தெப்பக்குளத்தில் கடலில் வாழும் தன்மை கொண்ட மீன்கள் வாழ்ந்து வருவதால் பொதுமக்கள்,பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ராமநாதபுரம் அருகே திருஉத்தரகோசமங்கையில் 3,100 ஆண்டு பழமையான மங்களேஸ்வரி அம்மன் உடனுரை மங்களநாதர் திருக்கோயில் உள்ளது. சிவன்கோயில்களில் ஆதி சிதம்பரம் என அழைக்கப்படுகிறது. இங்குள்ள விலை மதிக்கதக்க ஒற்றை பச்சை நிற மரகத கல்லால் ஆன நடராஜருக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடக்கக் கூடிய சந்தனம் காப்பு மற்றும் ஆருத்ரா தரிசனம் உலக புகழ்பெற்றது. இங்கு நாள்தோறும் உள் மாவட்ட மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமான ஆன்மீகசுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து செல்கின்றனர்.இந்த கோயில் மண்டபம், தூண்கள். சிலைகள், சிற்பங்கள் உள்ளிட்டவை கலை நுணுக்கங்களுடன் அழகிய சிற்ப வேலை பாடுகளுடன் அமைந்துள்ளது. புராணமும், புராதனமும் பின்னிப்பிணைந்த அற்புதமான இக்கோயிலில் பல அதிசயங்களும் நிறைந்து காணப்படுகிறது. அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக அக்னி தீர்த்த தெப்பக்குளம் வற்றாமல் இருக்கிறது. கோயில் பகுதியில் அமைந்துள்ள 20 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு பல்வேறு காலக்கட்டங்களில் மன்னர்கள் திருப்பணிகள் செய்துள்ளனர். திருவிளையாடல் புராணத்தில் வரும் வலைவீசும் படலம் எனும் சாபத்தால் மீனவ பெண்ணாக இருந்த பார்வதி தேவியை சிவப்பெருமான் வலை வீசி மீன்(திமிங்கலம்)பிடித்து, மனதில் புகுந்து ஆள்கொண்ட நிகழ்வு நடந்த இடம் என வரலாற்று ஆய்வுகளில் கூறப்படுகிறது.அந்த வகையில் இங்கு கடல் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இவற்றின் எச்சமாக மழை தண்ணீருடன், கடல் தண்ணீர் நிறைந்த தெப்பக்குளம் இன்றும் உள்ளது. பொதுவாக கோயில் தெப்பக்குளங்களில் நல்ல தண்ணீர் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு கடலில் உள்ள உப்புத்தன்மையுடன் கூடிய உப்புத் தண்ணீரே உள்ளது. மழை பெய்து குளம் பெருகினாலும் உப்புதன்மையுடனேயே இருக்கிறது. இந்த தெப்பக்குளம் அக்னி தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.இங்குள்ள தெப்பக்குளத்து கரையில் அமைந்துள்ள 3,100 ஆண்டு பழமையான இலந்தை மரத்தடியில் திருவாசகத்தை இயற்றிய மாணிக்கவாசகர் உள்ளிட்ட 1000 முனிவர்கள் தவம் இருந்தனர். அப்போது குளத்தில் அக்னி பிழம்பாக சிவப்பெருமான் தோன்றியதாகவும், அதில் மாணிக்கவாசகரை தவிர்த்து மற்ற 999 முனிவர்கள் தீயில் மாண்டு,சிவப்பெருமானுடன் முக்திடையந்ததாக வரலாற்று சான்றுகள் கூறுகிறது. இதனால் இந்த தெப்பக்குளம் ராமேஸ்வரம், காசிக்கு நிகரான புனிதமான தீர்த்தமாக கருதப்படுகிறது.ராமநாதபுரம் மாவட்டத்தில் அவ்வப்போது பருவமழை பொய்த்து போய் வறட்சி ஏற்படுவது வழக்கம். சில ஆண்டுகள் தொடர் வறட்சியும் ஏற்பட்டது. இத்தகைய சூழ்நிலையில் தண்ணீர் வற்றி அளவு குறைந்து காணப்படும். ஆனால் ஒருமுறை கூட குளத்து தண்ணீர் முழுமையாக வற்றியது கிடையாது என்கின்றனர். தெப்பக்குளத்தில் வாழக்கூடிய மீன்கள், நல்ல தண்ணீர் மற்றும் கடலில் வாழும் தன்மை கொண்டதாக இருப்பது ஆச்சரித்தை தருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தெப்பக்குளத்தை கோயிலுக்கு வரும் பொதுமக்கள், பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து, செல்பி, போட்டோ எடுத்து செல்கின்றனர்.திவான் பழனிவேல் பாண்டியன் கூறும்போது, மாணிக்கவாசகரால் பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். வரலாற்று சிறப்பு மிக்க புனித தீர்த்தமான இக்குளம் வறட்சி ஏற்பட்ட காலங்களில் கூட முழுமையாக வற்றியது கிடையாது. கடல் நீர் போன்று காணப்படும் இங்கு மழை பெய்தவுடன் முழுமையாக நிறைந்து விடும். ஆனால் உப்புத்தன்மை மாறாது. இந்த தண்ணீரில் விலா எனும் ஒருவகை மீன்கள் அதிகமாக உள்ளது. இவை நல்ல தண்ணீர், உப்புத்தண்ணீரில் வாழும் தன்மை கொண்டது. தெப்பக்குளத்தில் தண்ணீர் கிடப்பதால் கோயிலுள்ள மங்கள தீர்த்தக் கிணற்றிலும் வற்றாமல் ஊற்று ஊறி வருகிறது. இந்த தண்ணீரை கொண்டுதான் மூலவர் மங்களநாதர், மங்களேஸ்வரி அம்மனுக்கு அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது.தெப்பக்குளம் ஆழம் என்பதால், பக்தர்கள், பொதுமக்கள் நலன் கருதி பாதுகாப்பு வேலி, எச்சரிக்கை அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மாணிக்கவாசகர் சன்னதிக்கு வலது புறம் உள்ள மண்டபத்தின் வழியாக சென்று தீர்த்தம் எடுத்து தீர்த்தமாடி கொள்கின்றனர். ராமேஸ்வரம், காசிக்கு புனித யாத்திரை மேற்கொள்பவர்கள், சபரிமலை, பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட கோயில்களுக்கு விரதம் இருந்து செல்லுவோர் தீர்த்தம் எடுத்து நீராடி மாலை அணிந்து விரதத்தை தொடர்கின்றனர் என்றார்….