ஈரோடு: கனரக வாகனங்களின் அதிக எடை காரணமாக பாதாள சாக்கடை திட்டத்தில் சாலைகளில் போடப்பட்டுள்ள மேன் ஹோல் சேம்பர்கள் பழுதை சரி செய்ய ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டமானது கடந்த 2018ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தமுள்ள 60 வார்டுகளில் 53 வார்டுகளில் இத்திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதற்காக 525 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாதாள கழிவு நீர் குழாய்களும், 21 ஆயிரத்து 141 மேன் ஹோல் சேம்பர்களும் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது பயன்பாட்டில் உள்ள பகுதிகளில் மேன் ஹோல் சேம்பர்கள் பராமரிப்பு பணிகளுக்காக அடிக்கடி திறப்பதாலும், அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் சாலையில் செல்வதாலும் சேர்பர்கள் ஆங்காங்கே பழுதடைந்து கிடக்கின்றது. இதனால் அடிக்கடி விபத்துக்களும் நடைபெற்று வருகின்றது.