Tuesday, June 18, 2024
Home » திரவுபதி அம்மன் கோயில் திருவிழா பிரச்னை இளைஞர்களை கைது செய்ய வந்த போலீசாரிடம் மக்கள் வாக்குவாதம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திரவுபதி அம்மன் கோயில் திருவிழா பிரச்னை இளைஞர்களை கைது செய்ய வந்த போலீசாரிடம் மக்கள் வாக்குவாதம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

by Karthik Yash

கடலூர், மே 21: கடலூர் முதுநகர் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்னையில் இளைஞர்களை கைது செய்ய சென்ற போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் முதுநகர் அருகே உள்ள சங்கொலிக்குப்பம் கிராமத்தில் திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் வைகாசி மாதம் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு தீமிதி திருவிழா தொடங்கியது‌. இதில் முதல் நாள் திருவிழாவின்போது முன்விரோதம் காரணமாக சங்கொலிக்குப்பம் கிராமத்தை சேர்ந்த இரு தரப்பு இளைஞர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவரை ஒருவர் கற்களால் தாக்கி கொண்டனர். இதுகுறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின்பேரில் கடலூர் முதுநகர் போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து ஒரு தரப்பை சேர்ந்த 3 வாலிபர்களை கைது செய்தனர்.

இந்நிலையில் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களை கைது செய்வதற்காக கடலூர் முதுநகர் போலீசார் நேற்று காலை சங்கொலிக்குப்பம் கிராமத்திற்கு சென்றனர். இதுகுறித்து அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் போலீசாரிடம் தங்கள் பகுதி இளைஞர்களை கைது செய்யக்கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் போலீசாரை ஊருக்குள் விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர். மேலும் சங்கொலிக்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் கடலூர்-சிதம்பரம் சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த கடலூர் டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், இதற்கு முன்னர் நாங்கள் அளித்த பல்வேறு புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது எங்கள் பகுதி இளைஞர்களை கைது செய்ய வருவது சரியல்ல. எனவே கைது செய்யக்கூடாது என்று கூறினர். இதை கேட்ட டிஎஸ்பி பிரபு இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை சாலை மறியலை கைவிட்டு கலைந்து செல்லுங்கள் என்று கூறினார். இதை ஏற்ற பொதுமக்கள் அனைவரும் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் கடலூர் -சிதம்பரம் சாலையில் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

You may also like

Leave a Comment

12 + 6 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi