ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை ஒன்றியம் வீரமங்களம் மோட்டூர், பைவலசா ஆகிய கிராமங்களில் ஸ்ரீ திரவுபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயில்களில் கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதித் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் காலையில் மூலவருக்கு சந்தன காப்பு மற்றும் மதியம் மகாபாரத சொற்பொழிவும், இரவு கட்டை கூத்து நாடகமும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் நேற்று காலையில் 8 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.
அதைத்தொடர்ந்து திரளான பெண்கள் கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படையலிட்டு வழிபட்டனர். மாலை 6 மணிக்கு மேல் காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீ குண்டத்தில் இறங்கி தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழபிட்டனர். அதைத்தொடர்ந்து வாணவேடிக்கையுடன் இரவு உற்சவ திரவுபதி அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதைத்தொடர்ந்து ஆடலும், பாடலும் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இன்று தர்மர் பட்டாபிேஷகத்துடன் நடப்பாண்டிற்கான தீமிதி விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு தலைவர் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். விழாவில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க 20க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.