தஞ்சாவூர், ஜூன் 30: நிலத்தடி நீருக்கு வரி விதிக்கும் திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது எனறு தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது
இது குறித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் மாநில பொதுச் செயலாளர் வெங்கட்ராமன் கூறியிருப்பதாவது :-
மத்திய அரசின் நீர்ப்பாசனத் துறை அமைச்சர் எச்.எம். பாட்டீல், நிலத்தடி நீர் பயன்படுத்தும் உழவர்கள் மீது நீர்ப்பயன்பாட்டு வரி விதிக்கப்படும் என அறிவித்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. காவிரிப் பாசனப் பகுதியில் கூட உழவர்கள் பெரிதும் நிலத்தடிநீரைச் சார்ந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.நிலத்தடி நீர் பெருக்கத்தை உறுதி செய்வதற்கு அறிவியல் வழிப்பட்ட மனிதநேயம் உள்ள மாற்றுத் திட்டங்களைக் கருதிப் பார்க்காமல், ஏற்கனவே கடன்வலையில் சிக்கியுள்ள உழவர்கள் மீது நீர் வரி என்ற பெயரால் மேலும் ஒரு தாக்குதல் தொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் கிராமங்களிலும், நகரங்களிலும் குடியிருப்புகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டங்களுக்கு மானியமும் ஊக்கத்தொகையும் வழங்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.