பெரம்பலூர்: பச்சைமலையில் பெய்த திடீர் கனமழையால் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு செந்நிறத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பெரம்பலூர் மாவட்டத்தின் மேற்கு மற்றும் வடமேற்கு எல்லைகளாக, பசுமை போர்த்திய, பரந்து விரிந்த பச்சைமலைத் தொடர்ச்சி உள்ளது. இந்த மலைமேல் கடந்த (14ம்தேதி) சனிக் கிழமை இரவு கனமழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக வேப்பந்தட்டை தாலுகா, மலையாளப் பட்டி அருகேயுள்ள பச்சைமலை மேலிருந்து பெருக்கெடுத்து வந்த வெள்ளநீர் செம்புலப் பெயல் நீர்போல செம்மண் கலந்து கல்லாற்றில் கரைபுரண்டு சென்றது. இதனால் தங்கள் கிராமப் பகுதிகளில் மழையே பெய்யாத நிலையில் ஊரையொட்டி செல்லும் கல்லாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதே என மேட்டூர், அரும்பாவூர், வெட்டுவால் மேடு, பூமிதானம், கவுண்டர் பாளையம், கொட்டாரக்குன்று, மலை யாளப்பட்டி கிராமப்பகுதி பகுதிபொதுமக்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் பார்த்தனர். இந்த மழைநீர் தொண் டமாந்துரை, தழுதாழை, வெங்கலம், கிருஷ்ணாபுரம், வெண்பாவூர் பகுதிகளில் செல்லும் கல்லாற்றில் கரைபுரண்டு ஓடியது. குறிப்பாக வடகிழக்குப் பருவமழை தொடங்கினால் பச்சை மலை மீது கன மழை பெய்யும் வழக்கம் உள்ளது. நடப்பாண்டு அக்டோபர் மாதத்தில் பாதி நாட்களைக் கடந்து விட்ட நிலையில், எப்போது வடகிழக்குப் பருவமழை பெய்யுமெனக் காத்திருந்த மானாவாரி சாகுபடியை நம்பியுள்ள விவசாயிகளுக்கு, பச்சை மலை மேல் பெய்த கனமழை வடகிழக்குப் பருவ மழை தொடங்கிவிட்ட நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.