தியாகதுருகம், ஜூன் 8: கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த முடியனூர் கிராமத்தை சேர்ந்த இளையராஜா மனைவி கோமதி (31). இவர் சொந்தமாக மூன்று கறவை மாடுகளை வைத்துக் கொண்டு விவசாயமும் செய்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு வழக்கம்போல் மாடு மற்றும் கன்றுக்குட்டிகளை கொட்டகையில் கட்டிவிட்டு படுக்க சென்றுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை பால் கறப்பதற்காக சென்று பார்த்தபோது கன்றுக்குட்டி ஒன்று இறந்து கிடந்துள்ளது. மற்றொரு கன்றுக்குட்டி பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. இதைக் கண்ட கோமதி கூச்சலிட்டதையடுத்து அக்கம் பக்கத்தினர் வந்து கன்றுக்குட்டி இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் கோமதியின் ஆட்டுக்குட்டி இதேபோல் இறந்துகிடந்துள்ளது. இதேபோல் பரமசிவம் மற்றும் கருப்புடையார் ஆகியோரின் கன்றுக்குட்டி மற்றும் ஆடுகளை மர்ம விலங்கு கடித்து இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கிராம மக்களிடம் விசாரிக்கையில் நாய்கள் போல் உள்ள விலங்குகள் கூட்டம் கூட்டமாக ஊரை ஒட்டிய காட்டுப் பகுதிகளில் சுற்றித்திரிவதாகவும் மனிதர்களை கண்ட உடன் காட்டுப்பகுதிக்குள் ஓடி விடுவதாகவும் கூறினர். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கிராமத்தில் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க் வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இரவு நேரங்களில் கால்நடைகளை குறிவைத்து தாக்கும் மர்ம விலங்குகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை பாதுகாக்க முடியாமல் அச்சம் அடைந்துள்ளனர்.