சத்தியமங்கலம்,மே30: தமிழக கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது.
இந்த மலைப்பாதை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே நேற்று காலை கோவையிலிருந்து ராஜஸ்தான் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 26வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது டீசல் தீர்ந்ததால் நகர முடியாமல் நின்றது. இதனால் மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் இருபுறமும் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கண்டெய்னர் லாரியை நகர்த்தி நிறுத்தும் பணி நடைபெற்றது. 2மணி நேர போராட்டத்திற்கு பின் லாரி நகர்த்தப்பட்டது. இதையடுத்து போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்ற வாகனங்கள் புறப்பட்டு சென்றன. இதன் காரணமாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கு இடையே இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.