சேலம்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சேலம் மத்திய மாவட்ட திமுக மருத்துவர் அணி சார்பில் மருத்துவ முகாம் பள்ளப்பட்டியில் உள்ள குழந்தைகள் நல மையத்தில் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் அருள் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இதில், மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்து கொண்டு, முகாமை தொடங்கி வைத்து பேசினார். இம்முகாமில் பொதுமக்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, உடல் பருமன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும், எலும்பு முறிவு சிகிச்சை, குடலிறக்கம், சிறுநீரக கல் அறுவை சிகிச்சை, முதுகு தண்டுவட சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான மருத்துவ ஆலோசனைகளும், சிகிச்சைகளும் வழங்கப்பட்டன. முகாமில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயடைந்தனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர்கள் குமரவேல், மஞ்சுளா, மாநகர துணை செயலாளர் கோமதி, ஒன்றிய செயலாளர் அறிவழகன், மருத்துவர் அணி மாவட்ட தலைவர் பாலமுருகன், துணை தலைவர் சந்திரமோகன், துணை அமைப்பாளர்கள் பாலாஜி, இளம்தமிழன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.