ராமேஸ்வரம், நவ.22: திமுக மாநில இளைஞரணி சார்பில் நடைபெற்று வரும் நீட்விலக்கு விழிப்புணர்வு டூவீலர் பேரணி நேற்று ராமேஸ்வரம் வந்தது. திமுக மாநில இளைஞர் அணி சார்பில் நீட்தேர்வு விலக்கு விழிப்புணர்வு மற்றும் சேலத்தில் டிச.17ல் நடைபெறும் உரிமை மீட்பு இளைஞரணி மாநில மாநாடு குறித்த டூவீலர் பேரணி கன்னியாகுமரியில் துவங்கப்பட்டது. தமிழக விளையாட்டு மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரியில் துவங்கப்பட்ட இந்த பேரணி தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று நேற்று ராமேஸ்வரம் வந்தடைந்தது. இந்த பேரணியில் வந்தவர்களை ராமேஸ்வரம் நகர் திமுக கட்சியினர் ஆரவாரத்துடன் வரவேற்றனர். தொடர்ந்து மாநில உரிமை மீட்பு மாநாட்டில் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்க வேண்டும், நீட்தேர்வில் விலக்கு பெறுவதே நமது இலக்கு என பேரணியில் பங்கேற்ற திமுக மாணவர் அணி மாநில தலைவர் ராஜிவ்காந்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சம்பத் ராஜா, ராமேஸ்வரம் நகர் செயலாளர் நாசர்கான் மற்றும் கார்மேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து பேரணி தனுஷ்கோடிக்கு சென்று திரும்பியது.