சென்னை: திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தால், பெண்கள் உயர்கல்வி சேர்க்கை 27 சதவீதம் அதிகரித்துள்ளது என்று, 2ம் கட்ட திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1,04,347 கல்லூரி மாணவிகள் பயன்பெறும் வகையில், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 2ம் கட்டமாக கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராம் இந்து கல்லூரி மாணவிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.பெண் கல்வியை போற்றும் விதமாகவும், உயர் கல்வியை உறுதி செய்து இன்றைய பெண் சமூகம் நாளைய தமிழ்நாட்டின் நல்ல குடிமக்களை பேணும் உயர்கல்வி கற்ற பெண்களாகவும், கல்வியறிவு, தொழில்நுட்பம் நிறைந்த உழைக்கும் சமூகத்தை சார்ந்தவராகவும் உருவாகிட கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி 5.9.2022 அன்று சென்னையில் நடைபெற்ற விழாவில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கும் ‘புதுமைப் பெண்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக தொடங்கப்பட்ட புதுமை பெண் திட்டத்தில் 1,16,342 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:என் மனதில் ஆழமாக பதிந்திருக்கக்கூடிய, மூன்று மகிழ்ச்சியான செய்திகளை நான் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். முதலாவது, நேற்றைய தினம் காவல் துறையின் சார்பில் புதிய பணி ஆணைகள் வழங்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சி நடைபெற்ற நேரத்தில், அருகில் இருந்த டி.ஜி.பி.யிடத்திலே ஒரு கேள்வியை கேட்டேன், இன்றைக்கு பணி ஆணைகள் வழங்குகிறோம், அது எவ்வளவு பேருக்கு வழங்கப்படுகிறது என்று கேட்டேன். 17 காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கு அந்த பணி ஆணை வழங்கப்படுகிறது என்று குறிப்பிட்டு சொன்னார். அதோடு நிறுத்தாமல், இன்னும் ஒரு முக்கியமான செய்தியை சொன்னார். வழங்கப்பட்டிருக்கக்கூடிய அந்த 17 பேரில், 13 பேர் பெண்கள் என்று மகிழ்ச்சியோடு சொன்னார். அந்த 13 பெண்கள் என்னிடத்தில் அந்த ஆணையை பெறுவதற்காக வந்தபோது, மிடுக்கோடு வந்து என்னிடத்தில் அந்த ஆணையை பெற்றுக் கொண்டு சென்றார்கள். அது ஒரு மகிழ்ச்சியான செய்தி. அடுத்து, இன்று (நேற்று) காலையில் இந்த நிகழ்ச்சிக்காக நான் காரில் வந்துகொண்டிருந்தபோது, என்னோடு காரில் அமர்ந்திருந்த உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி ஒரு செய்தியை சொன்னார். இந்த புதுமை பெண் திட்டத்தால் பெண்கள் உயர்கல்வி சேர்க்கை கடந்த ஆண்டை விட 27 சதவீதம் அதிகமாகி இருக்கிறது என்றார். ஆகவே, இது இரண்டாவது மகிழ்ச்சி.மூன்றாவதாக, அமைச்சர் நாசர் சொன்னது. 1969ம் ஆண்டு அரசு நிதி உதவியுடன் தொடங்கப்பட்ட கல்லூரி இது. திமுக அரசு முதன்முதலாக ஆட்சிக்கு வந்த காலத்தில், அரசு நிதி உதவியோடு தொடங்கப்பட்ட கல்லூரி இது. முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் தன்னுடைய பேனாவால் போட்ட ஒரே ஒரு கையெழுத்துதான், இந்த ஐம்பது ஆண்டு காலத்தில் லட்சக்கணக்கான மாணவ – மாணவிகளை உருவாக்கி இருக்கிறது. மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்தி தந்த திட்டத்திற்குத்தான் முதல் கையெழுத்து போட்டேன். இதுவரை 180 கோடி பயணங்களை பெண்கள் கட்டணமில்லாமல் மேற்கொண்டுள்ளார்கள்.இந்த வரிசையில் தொடங்கப்பட்ட மகத்தான திட்டம்தான், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் பெயரால் தொடங்கப்பட்டிருக்கக்கூடிய இந்த புதுமைப்பெண் திட்டம். பள்ளியுடன் படிப்பை நிறுத்திவிடும் பெண்ணுக்கு, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கின்ற காரணத்தினால், அவர்கள் கல்லூரிக்குள் நுழைகிறார்கள். இதன்மூலமாக தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சி அதிகமாகும். படித்தவருடைய எண்ணிக்கை அதிகமாகும். அறிவுத்திறனும் கூடும். – இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். அதுதான் திராவிட மாடல் ஆட்சி என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பள்ளி படிப்பை முடித்து, உயர்கல்வியை தொடர முடியாமல் கைவிட்ட 10,146 மாணவிகள் இந்த திட்டத்தின் வாயிலாக தங்களது உயர்கல்வியை பயில தொடங்கியிருக்கிறார்கள். இதுவே இந்த திட்டத்தின் வரவேற்பிற்கும், வெற்றிக்கும் சான்றாக அமைந்திருக்கிறது.இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்திருக்கக்கூடிய மொத்த மாணவிகள் 1 லட்சத்து 56 ஆயிரத்து 16 பேர்களில், பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மாணவிகள் சுமார் 48 ஆயிரத்து 660 பேர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 50 ஆயிரத்து 550 பேர், பட்டியலின வகுப்பை சேர்ந்த மாணவிகள் சுமார் 44 ஆயிரத்து 880 பேர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த மாணவிகள் சுமார் 1,900 பேர் இதனால் பயனடைந்திருக்கிறார்கள். உயர்கல்வியை படியுங்கள். ஏதாவது ஒரு பாடத்தில் ஆராய்ச்சி செய்யுங்கள். தகுதியான வேலைகளில் சேருங்கள். தேர்தல் அறிக்கையில் புதுமைப்பெண் திட்டம் அறிவிக்கவில்லை. அதை இன்றைக்கு நிறைவேற்றுகிறோம். சொன்னது மட்டுமல்ல, சொல்லாததையும் செய்யக்கூடிய ஓர் ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி.இவ்வாறு அவர் பேசினார்.புதுமைப்பெண் திட்டத்தின் இரண்டாம் கட்ட தொடக்க விழாவில், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் ஏ.கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு, சமூக நலத்துறை இயக்குநர் ரத்னா, திருவள்ளூர் ஆட்சி தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ், சமூக நலத்துறை இயக்குநர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முன்னதாக திருவள்ளூர் மாவட்ட எல்லையில் மாவட்ட திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.தேர்தல் அறிக்கையில் அறிவித்தஉறுதிமொழி நிறைவேற்றப்படும்நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்களை செய்வோம், என்னென்ன உறுதிமொழிகளை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தோம். ஒன்றிரண்டு திட்டங்கள் இன்னும் நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. 85 சதவீதத்திற்கு மேல் உறுதிமொழிகளை நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் ஒரு 10, 15 சதவீதம் மிச்சம் இருக்கிறது அதை நான் மறுக்கவில்லை. அதையும் நான் உறுதியோடு சொல்கிறேன். நிச்சயமாக, உறுதியாக வரக்கூடிய காலக்கட்டத்தில் முழுமையாக நிறைவேற்றக்கூடிய ஆட்சி தான் இந்த திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்….