கடத்தூர், ஜூலை 23: கடத்தூர் பகுதியில் தின்பண்டம் விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்புதுறை அலுவலர் நந்தகோபால் ஆய்வு செய்து, எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினார். கடத்தூர் பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ, காபி மற்றும் சாம்பார், ரசம் பார்சல் வழங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் தலைமையிலான குழுவினர், கடத்தூர்- தர்மபுரி மெயின்ரோடு, அரூர் ரோடு, பஸ் நிலையம் மற்றும் பொம்மிடி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பேக்கரிகள், இனிப்பு கார வகை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 2 பேக்கரிகளில் சுகாதரமற்ற முறையில் எண்ணெய் பலகாரங்கள் மற்றும் பப்ஸ், கேக் வகைகளை பரிமாறியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதேபோல், ஒரு கடையில் பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ பார்சலிடப்பட்டது தெரிய வந்தது. மேலும், ஒரு இனிப்பு காரம் தயாரிப்பு நிறுவனத்தில் வறுத்த நிலக்கடலை மற்றும் பாகற்காய் சிப்ஸ், உருளைக்கிழங்கு, பிங்கர் சிப்ஸ் போன்றவற்றில் செயற்கை நிறமேற்றியது கண்டுபிடிக்கப்பட்டது. அனைத்து தின்பண்டங்களையும் அபறிமுதல் செய்தனர். தொடர்ந்து 3 கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கி, தலா ₹1000 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சரிவர சுகாதாரம் பராமரிக்காத ஒரு தயாரிப்பு நிறுவனத்திற்கு மேம்பாட்டு அறிக்கை நோட்டீஸ் அளிக்க, மாவட்ட நியமன அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.