லக்னோ: தினமும் ரூ.500 மட்டுமே சம்பாதிக்கும் சாலையோர வியாபாரிக்கு ரூ.366 கோடி ஜிஎஸ்டி வரிவிதிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் இருக்கும் தெருக்களில் துணிகளை விற்று தினமும் 500 ரூபாய் சம்பாதித்து வருபவர் 40 வயது துணி வியாபாரி இஜாஸ் அகமது. இந்த நிலையில் ரூ.366 கோடி ஜி.எஸ்.டி. மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு பதிவாகி உள்ளது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் ஜிஎஸ்டி வரியாக 366 கோடி ரூபாய் கட்டுமாறு, இவரை அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து ஜிஎஸ்டி அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் உதவியை இஜாஸ் அகமது நாடியுள்ளார். அப்போது நடந்த விசாரணையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறிய அளவிலான பழைய பொருட்கள் கடை நடத்துவதாக ஜன்சத் காவல் நிலையத்திற்கு உட்பட்ட காவல் கிராம முகவரியில் ஜிஎஸ்டி எண் பெறுவதற்காக பதிவு செய்து இருக்கிறார். தினமும் ரூ. 500 முதல் ரூ. 1000 வரை வருமானம் கிடைத்துள்ளது. தொடா்ந்து அவருக்கு வருமானம் வராததால் சாலையோர துணி வியாபாரியாக மாறியிருக்கிறார். அதன்பின் என்ன நடந்தது என்பதை ஜிஎஸ்டி அதிகாரிகள்தான் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேற்கு உத்தரப்பிரதேச ஜிஎஸ்டி துறையின் இணை கமிஷனர் ஜெஎஸ் சுக்லா கூறுகையில், ‘‘ரூ. 300 கோடிக்கும் அதிகமான ஜிஎஸ்டி வரி தொடர்பான பில் அனுப்பப்பட்டுள்ளது. இது பெரிய மோசடியாக கருதப்படுகிறது. முழுமையான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையில் இஜாஸ் அகமது ஜிஎஸ்டி எண்ணை வேறு சிலர் பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுபற்றிய முழுமையான விசாரணைக்குப் பின்னர்தான் அனைத்து விவரங்களையும் வெளியிடுவோம்’’ என்று தெரிவித்தார். …