ஜெயங்கொண்டம் ஜூன் 2: தமிழகத்தின் அனைத்து வட்டாரங்களிலும் ஒரு வட்டாரத்துக்கு இரண்டு கிராம பஞ்சாயத்துகளில் உழவரை தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை திட்டம் துவங்கப்பட்டது . அரியலூர் மாவட்டம் திருமானூர் வட்டாரத்தில் வேளாண்மை துறை சார்பில் கீழப்பழூர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் திட்டத்தின் துவக்க விழா நடத்தப்பட்டது. காணொளி காட்சி மூலம் திட்டத்தினை தமிழக முதல்வர் திறந்து வைத்தார். காணொளி மூலம் நடந்த துவக்க விழா முடிந்தவுடன் துறை வாரியாக தற்போது செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பரமசிவம் வரவேற்புரை வழங்கினார் .வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து வேளாண்மை துணை இயக்குனர் (மத்திய மற்றும் மாநிலத் திட்டங்கள் ) கணேசன் எடுத்துக் கூறினார். 2025 -26ம் ஆண்டில் எஸ்ஏடிஎஸ் திட்டத்தின் கீழ் கோடை உழவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.800 மானியம் வழங்கப்படுகிறது எனவும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் இயந்திர நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.4ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது எனவும் கூறினார். இத்திட்டங்களுக்கான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து விவசாயிகள் பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் இதுவரை நில உடமை பதிவு செய்யாத விவசாயிகள் உடனே பதிவு செய்து தங்களுக்குரிய அடையாள எண்ணை பெற்றுக் கொள்ளுமாறும் , இந்த அடையாள எண்ணை அடிப்படையாக வைத்தே இனி மானியத் திட்டங்கள் வழங்கப்படும் எனவும் கூறினார் . திட்டத்தின் பயனாளி விவசாயிகள் தங்கள் பெற்று வந்த நிதி உதவி இடையில் நிறுத்தப்பட்டால் தங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரையோ அல்லது வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பிஎம் கிசான் திட்ட உதவித்தொகையை தொடர்ந்து பெற ஏற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் . அதன் பின் பேசிய வேளாண் பொறியியல் துறை உதவி பொறியாளர் தங்கள் துறையின் மூலம் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு கொடுக்கப்படுகிறது என தெரிவித்தார்.
இத்துடன் தரிசு நிலத்தில் புதர்களை நீக்கி சமன் செய்து சிறு தானிய பயிர்கள் சாகுபடி செய்தால் எக்டருக்கு ரூ.5400 மானியம் வழங்கப்படும் எனக் கூறினார் . மின் மோட்டார் வாங்கி பொருத்தும் விவசாயிகளுக்கு ரூ.15000 மானியம் வழங்கப்படும் எனக் கூறினார் . இரவு நேரங்களில் வயலில் உள்ள மின்மோட்டரை இயக்க வேண்டிய சூழ்நிலையில் வீட்டிலிருந்தபடியே கைப்பேசியின் மூலம் மோட்டாரை இயக்கி பின் நிறுத்துவதற்குரிய கருவி சிறு குறு விவசாயிகளுக்கு 50% மானியத்திலும் பெரு விவசாயிகளுக்கு 40% மானியத்திலும் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படுகிறது என கூறினார் .
அடுத்ததாக பேசிய மீன்வளத்துறை அலுவலர் பிரதம மந்திரி மீன்வள மேம்பாடு திட்டத்தின் கீழ் ஒரு எக்டருக்கு மீன் குட்டை வெட்டுவதற்கு மானியம் வழங்கப்படுகிறது என கூறினார் . அதற்கு ரூ.7 லட்சம் செலவு செய்து போர் மற்றும் மின்மோட்டார் அமைத்து 10 X 10 பத்து செட் இரண்டு எண்கள் அமைத்து குளம் வெட்டினால் பொது விவசாயிகளுக்கு 40% மானியம், ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது என கூறினார் . மேலும் பயோ பிளாக் திட்டத்தின் கீழ் மீன்வளத் துறையினரால் ஏழு தொட்டிகள் அமைத்து குறைந்த அளவு நீரில் மீன் வளர்ப்பதற்கு மானியம் வழங்கப்படுகிறது. ரூ.7.50 லட்சம் செலவு செய்தால் பொது விவசாயிகளுக்கு 40 சதவீதம் மானியமும் ஆதிதிராவிடர் விவசாயிகளுக்கு 60% மானியமும் வழங்கப்படுகிறது என கூறினார்.
மாடித்தோட்ட தொகுப்பு ஒன்று ரூ.450 என்ற விலையில் வழங்கும் திட்டமும் தோட்டத்துறை மூலம் செயல்படுத்தப்படுகிறது என கூறினார் . அடுத்தபடியாக கால்நடை துறையின் சார்பில் பேசிய கால்நடைத்துறை மருத்துவர் தங்கள் துறையின் மூலம் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என கூறினார் . திட்டத்தில் பயனடையும் விவசாயிகளுக்கு 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருக்க வேண்டும் எனவும் மூன்று ஆண்டுகளுக்கு திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்துவேன் என உறுதிமொழிச் சான்று வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். வங்கியில் கடன் பெற்று பயனாளி திட்டத்தினை செயல்படுத்தலாம் எனவும் , 1.5 லட்சம் செலவில் அமைக்கப்படும் இதர கோழி பண்ணைகளுக்கு 50 சதவீத தொகை மானியமாக வழங்கப்படும் என கூறினார் . இத்துடன் 40 நாட்டுக்கோழிகளுடன் செயல்படுத்தப்படும் நாட்டுக்கோழி பண்ணைக்கு 50% கால்நடை துறையின் மூலம் மானியம் வழங்கப்படுகிறது என தெரிவித்தார் .
அதன் பிறகு வேளாண் வணிகத்துறை அலுவலர் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் உழவர் நிலத்திட்டங்கள் பற்றி எடுத்துக் கூறினார். தங்கள் துறையின் வழிகாட்டுதல்களின்படி திருமானூர் வட்டாரத்தில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது எனக் கூறினார் . இந்நிறுவனத்தில் மதிப்பு கூட்டும் இயந்திரமான கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் தயாரிக்கும் மரச்செக்கு கூட்டாக வாங்கப்பட்டு எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்தார் . மேலும் வங்கி கடன் மூலம் வேளாண் இயந்திரங்களை வாங்கும் விவசாயிகளுக்கு அவர்கள் செலுத்தும் வட்டியில் மூன்று சதவீத மானியத்தினை வேளாண் விற்பனை துறை வழங்குகிறது எனவும் கூறினார்.
அனைத்து துறை அலுவலர்களும் தங்கள் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறிய பிறகு வேளாண்மைத் துறை சார்பில் விவசாயிகளுக்கு மானியத்தில் உளுந்து விதை மற்றும் பேட்டரி தெளிப்பான் ஆகியவை வழங்கப்பட்டது . தோட்டக்கலைத்துறை சார்பில் கொய்யா எலுமிச்சை மற்றும் பப்பாளி கன்றுகள் உள்ள தொகுப்புகள் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கப்பட்டது.திருமானூர் வட்டார வேளாண்மை அலுவலர் நன்றி கூறினார்.
பல்வேறு மானியம் குறித்து விளக்கம் வாடகையின் விவரம்
ஒரு மணி நேரத்திற்கு டிராக்டருக்கு ரூ.500, ஜேசிபி இயந்திரத்துக்கு ரூ.890 நெல் அறுவடை இயந்திரம் ரூ.1160 ,நெல் அறுவடை இயந்திரம் பெல்ட் அல்லது செயின் பொருத்தியது ரூ.1880, புல் டோசர் ரூ.1230 என வாடகைக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. உரிய தொகையை செலுத்தி உழவன் செயலி மூலம் முன்பதிவு செய்து இயந்திரங்களை வாடகைக்கு பெறலாம் என தெரிவித்தார் .
மானிய விலையில் விதைகள்
குருவை நெல் விதைகள் , உளுந்து விதைகள் , அங்கக உரங்கள் ,நெல் ,பயறு வகை, சிறுதானிய பருத்தி ஆகிய பயிர்களுக்கான நுண்ணூட்ட உரங்கள் மற்றும் உயிர் உரங்கள் திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் விநியோகம் செய்யப்படுகிறது எனக் கூறினார்.