திண்டுக்கல், ஆக. 5: திண்டுக்கல்லில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு வெக்காளி அம்மன் கோயிலில் பக்தர்கள் பூக்குழி இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் வெக்காளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆடி மாதத்தில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதன்படி இந்த வருட திருவிழா கடந்த ஆக.2ம் தேதி சாமி சாட்டுதலுடன் துவங்கியது. நான்கு நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான நேற்று முன் தினம் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோயிலின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதில் சில பக்தர்கள் அலகு குத்தியும் , தீச்சிட்டி எடுத்தும், பூக்குழி இறங்கியும் அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவில் நகரின் பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.