திண்டுக்கல், ஜூலை 4: திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்ததாவது: மூத்த குடிமக்கள் நல்வாழ்விற்கென, அவர்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 25 அன்பு சோலை மையங்களை ஏற்படுத்த நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சரால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் முதியோர் நலனுக்கென அன்பு சோலை மையம் அமைக்க மூன்று ஆண்டுகள் முதியோர் இல்லம் நடத்தி வரும் தன்னார்வ அரசு சாரா தொண்டு நிறுவனத்திடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகிறது. அன்பு சோலை மையம் என்பது மூத்த குடிமக்கள் நலனுக்கென பகல் நேரத்தில் மட்டும் செயல்படும் ஒரு மையமாகும். இம்மையத்தில் முதியோர்களுக்கென உரிய மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். மேலும், இம்மையம் அமைப்பதற்கு அரசு மானியம் வழங்கப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் அன்பு சோலை மையம் அமைத்திட கருத்துருக்களை திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.