திண்டுக்கல், ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்கள் சுமார் 1.65 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது என கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களை திண்டுக்கல் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு கலெக்டர் சரவணன் வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் மாணவ, மாணவிகளின் கல்வி மேம்பாட்டிற்காக எண்ணற்ற திட்டங்களை அறிவித்து தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களை திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மாணவ, மாணவிகளுக்கு கொண்டு சென்று சேர்ப்பதில் மாவட்ட நிர்வாகம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கல்வி துறை சார்பில் 2025- 2026ம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் பிற கல்வி உபகரண பொருட்களை வழங்கும் பணியை சென்னையில் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், 2 ஜோடி சீருடைகள், புத்தக பைகள் ஆகியவை வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 62,646 மாணவ, மாணவிகள், 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் 83,564 மாணவ, மாணவிகள், 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் 19,115 மாணவ, மாணவிகள் என மொத்தம் சுமார் 1.65 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா பொருட்கள் வழங்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் மாவட்ட கல்வி அலுவலர்கள் நாகேந்திரன், வெற்றிச்செல்வி, தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.