திண்டுக்கல், மே 24: திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசின் 2025-26ம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், சிறுதானிய பரப்பை அதிகரிக்க பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் செயல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மாவட்டத்திற்கு மாற்றுப்பயிர் சாகுபடி மூலம் சிறுதானிய சாகுபடி பரப்பை அதிகரித்தல் கீழ் 600 ஏக்கர் இலக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறுதானியங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இடு பொருட்களான விதைகள், திரவ உயிர் உரங்கள், சூடோமோனஸ், நுண்ணூட்டக்கலவை மற்றும் அறுவடை செலவு ஆகியவற்றிற்கான 50 சதவீதம் மானியம் அல்லது அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ.1,250 மானியமாக வழங்கப்படவுள்ளது. அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறலாம். ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக ஒரு ஏக்கர் மானியம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெறவிரும்பும் விவசாயிகள் உழவன் செயலி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். என வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.