திண்டுக்கல், நவ. 20: திண்டுக்கல் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள், பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன் பெற இணையதளம் வாயிலாக நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2024- 2025 கல்வியாண்டில் தொழிற்கல்வி மற்றும் தொழில் சார்ந்த கல்வி பட்டப்படிப்பு பயிலும் முன்னாள் படைவீரர்களின் சிறார்கள் பயன்பெறும் வகையில் முன்னாள் படைவீரர்களின் பெண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.3000 வீதம் மற்றும் ஆண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.2,500 வீதம் என்ற வீதத்தில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
இக்கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை முன்னாள் படைவீரர்கள் நேரடியாக இணைய தளத்தின் மூலம் விண்ணப்பித்திடலாம். மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளம் www.ksb.gov.in என்ற முகவரியில் நவ.30ம் தேதிக்குள் விண்ணப்பித்து அனைத்து ஆவணங்களுடன் திண்டுக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பித்து பயன்பெறலாம். மேலும், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் பாரத பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அதிகளவு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.