திண்டுக்கல், ஆக. 4: திண்டுக்கல் மாவட்டத்தில் தமிழக அரசு நிதி உதவியுடன் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு, நவீன சலவையகம் அமைக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர் மற்றும் சீர்மரபினர் இனத்தை சார்ந்த வகுப்பினர்களின் பொருளாதார நிலையை முன்னேற்றும் விதமாக ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு, நவீன சலவையகம் அமைக்க தமிழக அரசு நிதி உதவியுடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆயத்த ஆடையக உற்பத்தி அலகு அமைப்பதற்கு மற்றும் நவீன சலவையகம் அமைப்பதற்கு தேவையான இயந்திரங்கள், மூலப்பொருட்கள் மற்றும் பிற முன் நிகழ்வுகளுக்கு தேவையான நிதியில் ரூ.3 லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க 10 நபர்கள் கொண்ட ஒரு குழுவாக செயல்பட வேண்டும். இக்குழு உறுப்பினர்களின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சம் மிகாமல் இருத்தல் வேண்டும். இத்திட்டங்கள் மூலம் பயன்பெற விரும்புபவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.