திண்டுக்கல், அக். 21: ஆயுதபூஜையை முன்னிட்டு திண்டுக்கல்லில் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. மல்லிகை பூ கிலோ ரூ.1200க்கு விற்பனையாகிறது. திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே மாநகராட்சிக்கு சொந்தமான அறிஞர் அண்ணா பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு, திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படும்.
இங்கிருந்து ஈரோடு, திருச்சி, சேலம், சென்னை போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரள மாநிலத்திற்கும் விற்பனைக்காக பூக்கள் அனுப்பி வைக்கப்படும். அக்.23ம் தேதி ஆயுதபூஜை என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்கள் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த வாரம் ரூ.800க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.1200க்கு விற்பனையாகிறது. ரூ.150க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.700க்கு விற்பனையாகிறது.
இதுபோன்று ரூ.200க்கு விற்பனையான முல்லை பூ ரூ.500க்கும், ரூ.250க்கு விற்பனையான ஜாதிப்பூ ரூ.350க்கும், ரூ.80க்கு விற்பனையான அரளிப்பூ ரூ.400க்கும், ரூ.20க்கு விற்பனையான சம்பங்கி ரூ.180க்கும், ரூ.50க்கு விற்பனையான பன்னீர் ரோஸ் ரூ.150க்கும், ரூ.30க்கு விற்பனையான செவ்வந்தி ரூ.150க்கும், செண்டுமல்லி கிலோ ரூ.50க்கும், வாடாமல்லி கிலோ ரூ.60க்கும், விருச்சிப்பூ ரூ.250க்கும், கோழிக்கொண்டை பூ கிலோ ரூ.40க்கும், தாமரைப்பூ ரூ.10க்கும் விற்பனையாகிறது.